2017-10-23 16:46:00

கடவுளுக்கு முன்னுரிமை கொடுப்பது வாழ்வை வழிநடத்துகின்றது


அக்.23,2017. இவ்வுலகக் கடமைகளை நிறைவேற்றுவது, கடவுளுக்கு முன்னுரிமை கொடுப்பது ஆகிய இரண்டின் முக்கியத்துவத்தை, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துச் சொன்னார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த இருபதாயிரத்திற்கு மேற்பட்ட திருப்பயணிகளுக்கு ஆற்றிய மூவேளை செப உரையில், இவ்வுலகக் கடமைகளை நிறைவேற்றுவது, கடவுளுக்கு முன்னுரிமை கொடுப்பது ஆகிய இரண்டும்,  ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல, மாறாக, அவையிரண்டும் ஒன்றையொன்று ஒத்துச்செல்பவை என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளுக்கு முன்னுரிமை கொடுப்பது, நம் அன்றாட செயல்களை வழிநடத்துகின்றது என்றும், கடவுளையும், சீசரையும் எதிர் எதிராக வைக்காமல், மனித மற்றும் சமூக செயல்பாடுகளில், தெளிவான விதத்தில் கிறிஸ்தவர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை.

சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா என, பரிசேயர்கள் இயேசுவிடம் கேள்வி கேட்டது பற்றிய, இஞ்ஞாயிறு மத்தேயு நற்செய்தி வாசகத்தை (மத்.22:15-21) மையப்படுத்தி மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, நம்மிடமுள்ள அனைத்தையும், நம் இருப்பையும் அருளியிருப்பவர் ஆண்டவரே என்று கூறினார்.

மேலும், இஸ்பெயினின் உள்நாட்டுச் சண்டையில், பார்சலேனாவில் கொல்லப்பட்ட கிளேரிசியன் சபையின் 109 மறைசாட்சிகள் இச்சனிக்கிழமையன்று முத்திப்பேறுபெற்றவர்களாக அறிவிக்கப்பட்டதையும், இம்மூவேளை செப உரையின் இறுதியில் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை.

அக்டோபர் 22, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் விழாவையும் இம்மூவேளை செப உரையின் இறுதியில் நினைவுகூர்ந்து, திருஅவையின் மறைப்பணியை அத்திருத்தந்தைக்கு அர்ப்பணித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும் அவர், இஞ்ஞாயிறன்று வெளியிட்ட ஒரு டுவிட்டர் செய்தியில், இன்று புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களை நினைவுகூர்கின்றோம், அஞ்ச வேண்டாம், கிறிஸ்துவுக்கு உங்கள் கதவுகளை அகலத் திறங்கள் என்ற அவரின் வார்த்தைகளையும் நினைத்துப் பார்ப்போம் என்று கேட்டுக்கொண்டார்.  

அக்டோபர் 22, இஞ்ஞாயிறன்று உலக மறைபரப்பு தினம் சிறப்பிக்கப்பட்டதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, திருஅவை தன் இயல்பிலே தூதுரைக்கும் பண்பைக் கொண்டுள்ளது, தூதுரைப்பணி, கிறிஸ்தவ விசுவாசத்தின் மையம் என்ற சொற்களையும், இந்நாளில் நினைப்போம் என்ற சொற்களை, இஞ்ஞாயிறன்று மற்றுமொரு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

உலகில், குறிப்பாக, இம்மாதம் 26ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள கென்யாவில் அமைதி நிலவ செபிக்குமாறு திருப்பயணிகள் எல்லாரையும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். கென்யாவில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தல் முடிவுகளை உச்ச நீதிமன்றம் இரத்து செய்ததைத் தொடர்ந்து, வருகிற வியாழனன்று மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதியின் தேர்தல் முடிவுகளையொட்டி தொடங்கிய கலவரங்களில் குறைந்தது எழுபது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.