2017-10-23 16:05:00

புனித பூமியில் நீடித்த நிலையான அமைதி, விரைவில் கிட்டும்


அக்.23,2017. புனித பூமியில், நீடித்த மற்றும் நிலையான அமைதி, விரைவில் கிட்டும் என்ற தனது நம்பிக்கையையும் செபத்தையும் தெரிவித்து, எருசலேமின் அமைதிக்காகச்  செபிப்போம் என்று, முதுபெரும் தந்தை மூன்றாம் தெயோபிலோஸ் (Theophilos III) அவர்களிடம், இத்திங்களன்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

எருசலேமின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை மூன்றாம் தெயோபிலோஸ் அவர்கள் தலைமையிலான குழுவை, இத்திங்களன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, தான் எருசலேமுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது, தனக்குக் கொடுத்த வரவேற்பையும், முதுபெரும் தந்தை மூன்றாம் தெயோபிலோஸ் அவர்களுடன் சேர்ந்து செபித்ததையும் நன்றியுடன் குறிப்பிட்டார்.

கத்தோலிக்கத் திருஅவைக்கும், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைக்கும் இடையே நூற்றாண்டுகளாக இடம்பெற்ற, பிறரன்பின் பெரும் தவறுகளை மறக்காமல், கடந்தகாலத்தை மாற்றுவது என்பது இயலக்கூடியதல்ல எனினும், நம் ஆண்டவர் விரும்பும் முழு ஒப்புரவு மற்றும் உடன்பிறப்பு ஒன்றிப்பின் வருங்காலத்தை நோக்குவோம் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அதிலும், இக்காலத்தில் இவ்வாறு செய்யத் தவறுவது பெரும் குறையாக இருக்கும் என்றும், கத்தோலிக்கருக்கும், ஆர்த்தடாக்ஸ் சபையினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் இறையியல் உரையாடல், முழு ஒன்றிப்பை நோக்கிய நம் பயணத்திற்கு உதவும் என்றும் திருத்தந்தை கூறினார்.

புனித பூமியில் இடம்பெற்றுவரும் மோதல்களால் துன்புறும் அனைத்து மக்களுடனும் தான் ஒருமைப்பாடு கொள்வதாகவும், அனைவரின் உரிமைகளை அங்கீகரிக்கும் நீதியின் அடிப்படையில் நிலையான அமைதிக்கு, அதற்குப் பொறுப்பானவர்கள் தங்களின் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டுமென விண்ணப்பிப்பதாகவும் திருத்தந்தை கூறினார்.

யூத, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் விசுவாசிகளுக்கும், அவர்களின் வழிபாட்டுத்தலங்களுக்கும் எதிராக காட்டப்படும் எந்தவிதமான வன்முறை, பாகுபாடு மற்றும் சகிப்பற்ற நடவடிக்கைகள், புறக்கணிக்கப்பட வேண்டும் என்றும், உருக்கமாக அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எருசலேமின் உலகளாவிய தன்மை பாதுகாக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும், அனைவரும் அமைதியாக வாழக்கூடிய இடமாக எருசலேம் மாற வேண்டும், இல்லாவிடில், துன்பங்கள் முடிவின்றி தொடரும் எனவும் எச்சரித்த திருத்தந்தை, கிறிஸ்தவக் குடும்பங்களும் இளையோரும் புனித பூமியைவிட்டு புலம்பெயராமல் இருப்பதற்கு, பல்வேறு கிறிஸ்தவ குழுக்களிடையே ஒத்துழைப்புக்கும் விண்ணப்பித்தார்.

புனித பூமியிலுள்ள பல்வேறு கிறிஸ்தவ குழுக்களும், சமுதாயத்தின் ஒருங்கிணைந்த குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டு, அவர்கள் தங்களின் சொந்த உரிமைகளைக் கொண்டிருந்து, அமைதிக்கும், பொதுநலனுக்கும், ஒப்புரவுக்கும், நல்லிணக்கத்திற்கும் தொடர்ந்து உழைப்பார்கள் என்ற தனது நம்பிக்கையையும், அக்குழுக்களுக்கு தன் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், முதுபெரும் தந்தை மூன்றாம் தெயோபிலோஸ் அவர்கள் தலைமையிலான குழு, திருத்தந்தையை சந்தித்த பின், திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், பன்னாட்டு உறவுகளின் திருப்பீட செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகிய இருவரையும் அக்குழு சந்தித்தது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2014ம் ஆண்டு மே மாதம் மேற்கொண்ட எருசலேம் திருத்தூதுப் பயணத்தின்போது முதுபெரும் தந்தை மூன்றாம் தெயோபிலோஸ் அவர்களைச் சந்தித்தார். மேலும், அதே ஆண்டு ஜூன் மாதத்தில், வத்திக்கான் தோட்டத்தில் அமைதிக்காக இடம்பெற்ற பல்சமய செப வழிபாட்டிலும் முதுபெரும் தந்தை மூன்றாம் தெயோபிலோஸ் அவர்கள் கலந்துகொண்டார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.