2017-10-23 12:55:00

வாரம் ஓர் அலசல் – அன்புச் சங்கிலி


அக்.23,2017. அன்பு இதயங்களே, தீபாவளி திருநாளைக் கொண்டாடி, பரிசுகளைப் பகிர்ந்து மகிழ்ந்து, மீண்டும் வழக்கமான வாழ்வு தொடங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தின், சூரத் நகரில், சாவ்ஜி டோல்கியா என்ற பிரபல வைர வியாபாரி, இந்த ஆண்டு தீபாவளிப் பரிசாக, தன்னுடைய வைர நிறுவனத்தில் பணிபுரியும் ஏழாயிரம் ஊழியர்களின் மனைவியருக்கு, ஹெல்மெட்டைப் பரிசாக வழங்கியுள்ளாராம். இவர் ஆண்டுதோறும், தீபாவளியின்போது தன் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக, வீடு, கார், விலையுயர்ந்த பொருட்கள் என வழங்குவது வழக்கமாம். மூன்று ஆண்டுகளுக்கு முன், தன்னுடைய ஊழியர்களுக்கு, 400 வீடுகள் மற்றும், 1,260 கார்களை, தீபாவளி போனசாக வழங்கினாராம். டோல்கியா அவர்கள், தனது இந்த ஆண்டு தீபாவளி பரிசு பற்றி கூறுகையில், என் ஊழியர் ஒருவர், தன் மனைவியை, இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, விபத்தில் சிக்கினார். அந்த ஊழியர், ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர் பிழைத்தார். ஆனால், பின்னால் அமர்ந்து சென்ற, அவரது மனைவி, கீழே விழுந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனவே, பெண்களைப் பாதுகாக்க, தீபாவளி பரிசாக, ஹெல்மெட் வழங்க முடிவு செய்தேன் என்றார்.

இந்தியாவின் Tata அறக்கட்டளை நிறுவனம், இந்த ஆண்டு தீபாவளி பரிசாக, புற்றுநோயாளர் சிகிச்சைக்காக, ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் மருத்துவம் சார்ந்த ஏனைய உதவிகளையும் வழங்கியுள்ளது. அசாம், ஜார்க்கணட், இராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஆந்திர பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில், ஆயிரக்கணக்கான புற்று நோயாளர்களுக்குத் தரமான சிகிச்சை வழங்கப்படுவதற்காக, இந்த உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் Ratan Tata அவர்கள் அறிவித்துள்ள, இந்த உதவித் திட்டம் பற்றி Mumbai Mirror ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் Guwahatiயிலுள்ள புற்றுநோய் நிறுவனத்திற்கு 540 கோடி ரூபாய் திட்டத்திற்கு மாநில அரசோடு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது அந்த அறக்கட்டளை. ஜெய்ப்பூரில் 200 கோடி ரூபாய் செலவில்,  புதிய மருத்துவமனை ஒன்று உருவாக உள்ளது. ராஞ்சியில் புதிய மையத்திற்கு 23.5 ஏக்கர் நிலத்தை இந்த அறக்கட்டளை ஒதுக்கியுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

'தபால்காரர்' குருசாமி என அழைக்கப்படும், குருசாமி அவர்களின் சேவைகளைப் பாராட்டி, காரைக்குடி கம்பன் கழகம், அவருக்கு 'சேவா ரத்னா' விருது வழங்கியுள்ளது. எட்டாம் வகுப்பை முடித்து, 1940ம் ஆண்டில் அஞ்சல் துறையில் பணியில் சேர்ந்தவர் பி.எம்.குருசாமி. 'பிஎம்ஜி' என்று அறியப்படும் இவர், 1942ம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்தார். இதனால் சிறைக்கும் அனுப்பப்பட்டார். ஆனால் அங்கிருந்த சிறைக்காவலர் குருசாமிக்கு 16 வயதே ஆகிறது என்பதைக் கண்டுபிடித்தார். இதனால் குருசாமி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அதையடுத்து தன்னுடைய அஞ்சலக வேலையை மீண்டும் தொடர்ந்தார் குருசாமி. காலங்கள் உருண்டோடின. மண்டபம் அஞ்சல் நிலையத்தில் 1943ம் ஆண்டில், நான்காம்நிலை ஊழியராக பதவியேற்றார் குருசாமி. தன்னுடைய அர்ப்பணிப்பான வேலை உணர்வால் 1985ம் ஆண்டில் தபால்காரராக ஓய்வு பெற்றார். தற்போது குருசாமிக்கு 91 வயதாகிறது. ஆனாலும் பணி ஓய்வுக்குப் பிறகு ஏறக்குறைய 32 வருடங்களாக, தினந்தோறும் தலைமை தபால் நிலையத்துக்குத் தவறாமல் சென்று, தினசரி காலை 2 மணி நேரமும், மாலை 1 மணி நேரமும் தபால் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு உதவுகிறார். தெரியாதவர்களுக்கு படிவங்களை நிரப்பிக் கொடுப்பது, பணத்தைக் கணக்கில் போடுவது, எடுத்துத் தருவது ஆகியவற்றை மேற்கொள்கிறார். அத்துடன் ஆர்.டி. ஆரம்பித்துக் கொடுப்பது, அரசின் அஞ்சலக திட்டங்கள் குறித்து கிராம மக்களிடம் விளக்குவது ஆகிய செயல்களையும் குருசாமி ஆர்வத்துடன் மேற்கொள்கிறார். ''ஓய்வுக்குப் பிறகு யாருமே பழைய அலுவலகத்துக்குச் செல்ல மாட்டார்கள், ஆனால் அதில் குருசாமி விதிவிலக்கு. 'மை ஸ்டாம்ப்' திட்டத்தைத் தொடங்க ஏராளமானோரை ஊக்குவித்தவர் அவர்தான்'' என்கிறார் அஞ்சல் துறை கண்காணிப்பாளர் என்.ஜே.உதயசிங். ''கடவுள் எனக்கு நல்ல உடல்நிலையைக் கொடுத்திருக்கிறார். என்னுடைய உடல் ஒத்துழைக்கும் வரை என்னாலான சேவைகளைத் தொடர்வேன்'' என்கிறார் குருசாமி.

மனித வாழ்வில் மூன்று காரியங்கள் முக்கியமானவை என்பார்கள். இந்த மூன்றுமே கருணையுடன் இரு, கருணையுடன் இரு, கருணையுடன் இரு என்பதே. அமெரிக்காவில், ஒருநாள், ஒரு நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு Mercedes-Benz கார் நின்றுகொண்டிருந்தது. பழுதான அதன் சக்கரத்தை மாட்டமுடியாமல், ஒருபெண், தவிப்புடன், வழியில் செல்வோரிடம் உதவி கேட்டுக்கொண்டிருந்தார். எல்லாருமே வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒருவர், அந்தப் பெண்ணுக்கு உதவச் சென்றார். தன்னைப்பார்த்து அந்தப் பெண் பயப்படுவதை புரிந்துகொண்டார் அவர். அதனால், அவர், கனிவான குரலில், “நான் உங்களுக்கு உதவி பண்ணத்தாம்மா வந்திருக்கேன். ஏன் இந்தக் குளிர்ல வெளியே நிக்கறீங்க? கார் உள்ளே போய் உட்காருங்க. நான் நொடியில ஸ்டெப்னி மாட்டித்தரேன்”னு சொல்லி, கிடுகிடுன்னு வேலை செய்து அதை மாட்டிக் கொடுத்தார். அந்த மனிதரின் உடம்பெல்லாம் அழுக்கு. முழங்கையில் இலேசாக சிராய்ப்பு. “ஓகேம்மா! வேலை முடிஞ்சுது. இனிமே நீங்க கிளம்பலாம்”னார். “உங்களுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும்?”என, அந்தப் பெண் கேட்டார். எவ்வளவு கேட்டாலும், அந்தப் பெண் கொடுக்கத் தயாராகவே இருந்தார். ஆயினும், அந்த மனிதர், ஒரு புன்னகையோடு, “நான் மெக்கானிக் இல்லம்மா. இது என் தொழில் இல்லை. இது ஓர் உதவிதான். அதனால, எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் பத்திரமாக போங்கள் என்றார். இல்லப்பா… நீங்கள் இந்த நடுவழியில் உதவி செய்யவில்லையென்றால் என் கதி என்னவோ, அதனால், எவ்ளோ வேணும்னு தயங்காம கேளுங்கள்; கொடுக்கிறேன்” என்று அந்தப்பெண் சொன்னார். அதற்கு அவர், “அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க, மேடம். என் பெயர் பிரெய்ன் ஆண்டர்சன் (Bryan Anderson). அடுத்த முறை உதவி தேவைப்படுகிற யாரையாவது பார்த்தீங்கன்னா, அப்போ எனக்குக் கொடுக்க நினைக்கிற தொகையை அவங்களுக்குக் கொடுத்துட்டு, என்னை மனசுல நினைச்சுக்கோங்க. அது போதும்!”னு சிரிச்சுட்டு, வந்த வழியைப்பார்த்து சென்றுவிட்டார் பிரெய்ன். சில மைல் தூரம் போனதும், ஒரு சிறிய உணவகத்தில் காரை நிறுத்தி உணவருந்தச் சென்றார் அந்தப்பெண். அங்கு, ஒரு பணிப்பெண் வேகமாக வந்து, முகத்தைத் துடைக்க, முதலில் ஒரு துண்டைக் கொடுத்தார். "சாப்பிட என்ன வேண்டும் எனக் கேட்டு, சுறுசுறுப்பாக பரிமாறினார். அந்த பணிப்பெண், எட்டுமாத கர்ப்பிணியாக இருந்துகொண்டு, முகத்தில் எவ்விதச் சோர்வுமின்றி, இப்படி வேலை செய்வதை இரசித்தார் அந்தப்பெண். சாப்பிட்டு முடிந்ததும், அவர் நூறு டாலர் கொடுத்தார். அதைக்கொடுக்கும்போது பிரெய்ன் ஆண்டர்சனை நினைத்துக்கொண்டார். அந்தப் பணிப்பெண், கட்டணத்தொகை போக, கல்லாவிலிருந்து மீதி சில்லறை வாங்கிக்கொண்டு வருவதற்குள், அந்தப்பெண் வெளியேறி, காரில் கிளம்பிப் போய்விட்டார். "அடடா… மீதியை வாங்காமல் போயிட்டாங்களே!" ன்னு நினைத்துக்கொண்டே, மேஜையில் பார்த்தால், கை துடைக்கும் துணிக்குக் கீழே, இன்னும் 400 டாலர் பணம் இருந்தது. கூடவே, ஒரு துண்டுச்சீட்டில், ‘மை டியர்! இந்தப் பணம் உனக்குத்தான். இந்தச் சமயத்தில் உனக்கு இது தேவைப்படலாம். மற்றபடி, நீ எனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை. ஒரு நெருக்கடியில், முகம் தெரியாத ஒருத்தர் எனக்கு உதவி செய்தார். அதன் தொடர்ச்சியாக, இப்போது உனக்கு நான் செய்திருக்கிறேன். ஒருவேளை, எனக்கு நீ ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தால், இந்த அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி தேவைப்படும் வேறு ஒருவருக்கு உன்னால் முடிந்த உதவியைச்செய்" என்று எழுதி வைத்திருந்தார்கள். அடுத்த மாதம் பிரசவச் செலவுக்கு என்ன செய்வதென்று அந்த பணிப்பெண்ணும், அவர் கணவரும் அதிகமாகவே கவலைப்பட்ட நேரத்தில், இந்தப் பணம் அவர்களுக்குப் பெரிய உதவி! இரவு வீட்டுக்குப் போனதும், அந்தப் பணிப்பெண், தன் கணவரிடம் நடந்ததை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக விவரித்து, “எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு. கவலையை விடுங்க, மை டியர் பிரெய்ன் ஆண்டர்சன்!”னு சொன்னாராம்.

ஸ்கேட்போர்ட் விளையாட்டில் புகழ்பெற்றவர்தான் பிரெய்ன் ஆன்டர்சன். இந்த உண்மை நிகழ்வை கேட்கும்போது, உதவி தேவைப்படும் ஒருவருக்கு நாமும் உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா. தக்கநேரத்தில், யாருக்கோ நாம் செய்த உதவி, நமக்கு உதவி தேவைப்படும்போது, வேறு யாரோ ஒருவர் வழியாக கிடைக்கின்றது. இது பலரின் அனுபவமும்கூட. நாம் வாழ்வதே மற்றவரால்தான். யாரோ ஒரு விவசாயி நாம் உண்ணும் உணவைத் தயாரிக்கிறார். யாரோ ஒரு தொழிலாளி, நாம் உடுத்தும் ஆடைகளைத் தயார் செய்கிறார். நாம் சாப்பிட, உறங்க, குளிக்க, வாழ்வில் வளர, கல்வி பெற, வேலை கிடைக்க, இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் யாரோ ஒருவரின் வியர்வை சிந்தப்படுகின்றது. ஆதலால், பெற்ற வாழ்வுக்கு நன்றி சொல்லி, நாம் பெறும் அன்பு தேங்கிவிடாமல், அது அடுத்தவருக்கும் ஆற்றப்படச் செய்வோம்.

அயலவர் மீது அன்புகூருங்கள்; அப்போது, உங்களை நீங்களே அன்புகூர ஆரம்பிப்பீர்கள். அடுத்தவர்க்கு உதவும்போதுதான் தன்மீது அன்பு பெருகும். நம் அன்புச் சங்கிலி, நீளத்தில், ஆழத்தில், அகலத்தில், எல்லாப் பக்கங்களிலும் விரிவடையட்டும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.