2017-10-24 16:09:00

கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரிப்பு


அக்.24,2017. 2015ம் ஆண்டுக்கும், 2017ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்தான், கிறிஸ்தவர்கள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்று, Aid to the Church in Need உலகளாவிய கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு கூறியுள்ளது.

நசுக்கப்பட்ட மற்றும் மறக்கப்பட்ட என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை பற்றிக் கூறிய Aid to the Church in Need அமைப்பின் Marta  Petrosillo அவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மிகவும் மோசமடைந்து, பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது என்று தெரிவித்தார்.

மத்திய கிழக்கில், ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாம் அரசின் நடவடிக்கைகளால், சிரியாவிலுள்ள கிறிஸ்தவர்களில் 75 விழுக்காட்டினரும்,  ஈராக்கிலுள்ள கிறிஸ்தவர்களில் பாதிப் பேரும் நாடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றும் Petrosillo அவர்கள், Rome Reports செய்தியிடம் தெரிவித்தார்.

நைஜீரியாவில் போக்கோ ஹராம் இஸ்லாம் தீவிரவாத அமைப்பு, கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தும் அட்டூழியங்களால், ஏறத்தாழ இருபது இலட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர், 200 ஆலயங்கள் வரை சேதப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் 15 ஆயிரம் சிறார் பெற்றோரை இழந்துள்ளனர்.

சீனாவில், திருஅவை அதிகாரிகள், அரசு அதிகாரிகளால் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு வருகின்றனர், எரிட்ரியா, வட கொரியா போன்ற சர்வாதிகார நாடுகளிலும், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தான்  போன்ற நாடுகளிலும் கிறிஸ்தவர்கள் துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்று, அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Rome Reports / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.