2017-10-25 16:17:00

காலநிலை மாற்றம் குறித்த வத்திக்கான் கருத்தரங்கு நவ.2-4


அக்.25,2017. “மக்கள் மற்றும் பூமிக்கோளத்தின் நலவாழ்வு : நம் பொறுப்பு” என்ற தலைப்பில், வருகிற நவம்பர் 2ம் தேதி முதல், 4ம் தேதி வரை, திருப்பீட அறிவியல் கழகமும் (PAS), திருப்பீட சமூக அறிவியல் கழகமும் (PASS)  இணைந்து வத்திக்கானில் கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளன.

இக்கருத்தரங்கு பற்றி செய்தியாளர்களிடம் அறிவித்த, இக்கழகங்களின் பிரதிநிதிகள்,   முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காலநிலையில் இடம்பெறும் மாற்றங்களைக் களைவதன் அவசியம் குறித்து கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெறும் என்று விளக்கினர்.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை பற்றிய பல விவகாரங்கள் குறித்து இவ்விரு கழகங்களும், கடந்த பல ஆண்டுகளில் கலந்துரையாடல்கள் நடத்தியுள்ளன என்றும், காற்று மாசுகேடு மற்றும் காலநிலை மாற்றங்களால் நலவாழ்வு பாதிக்கப்படுவது குறித்து இதுவரை முழுமையாகப் பேசவில்லை என்றும் அக்கூட்டத்தில் கூறப்பட்டது.

காற்று மாசுகேட்டால் நலவாழ்வு பாதிக்கப்படுவது குறித்து 1950களிலே அறிவியல் ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன, ஆனால் காற்று மாசுகேட்டால் நலவாழ்வில் ஏற்படும் பாதிப்புகள், இக்காலத்தில் பெருமளவில் உள்ளது என்றும், அக்கூட்டத்தில் கூறப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.