2017-10-25 16:22:00

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : இறை நம்பிக்கை தரும் அருள்


அக்.,25,2017. இதமான குளிருடன் இப்புதன்கிழமை விடிந்திருக்க, அதற்கியைந்த வகையில் சூரியக் கதிர்களும் இளஞ்சூட்டுடன் விரிந்திருக்க, தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு 'கிறிஸ்தவ எதிர் நோக்கு, அதாவது, கிறிஸ்தவ நம்பிக்கை குறித்த தன் மறைக்கல்வி தொடர் உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில், இயேசு சிலுவையிலறையப்பட்டபோது, அவருக்கு வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் சிலுவையில் தொங்கிய இரு கள்வர்கள் தங்களுக்குள் நடத்திய உரையாடல் மற்றும் இயேசுவுடன் அவர்கள் நடத்திய உரையாடல் குறித்த லூக்கா நற்செய்தி 23ம் பிரிவிலிருந்து அப்பகுதி வாசிக்கப்பட, திருத்தந்தையும் தன் கருத்துக்களை திருப்பயணிகளாடு பகிர்ந்து கொண்டார்.

அன்பு சகோதர சகோதரிகளே! கிறிஸ்தவ நம்பிக்கை குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று, 'விண்ணுலகில் நிறைவேறும் நம்பிக்கை' என்பது பற்றி உங்களுடன் கருத்துக்களைப் பகிர ஆவல் கொள்கின்றேன். கல்வாரி மலையில் சிலுவையில் தொங்கிய இயேசு, நல்ல கள்வன் அன்றே அவரோடு விண்ணுலகில் இருப்பார் என்ற உறுதியை வழங்குகிறார். பாவிகளாகிய நம்முடன் இயேசு கொண்டிருக்கும் ஒருமைப்பாடு, சிலுவையில் தன் உச்சத்தை எட்டுகிறது. தன் இவ்வுலக கடைசி நிகழ்வுகளுள் ஒன்றாக, இயேசு, ஒரு மனந்திருந்திய குற்றவாளிக்கு, வானகத்தின் கதவுகளைத் திறக்கிறார். இறை இரக்கத்திற்கென நல்ல கள்வன் தாழ்மையுடன் விடுத்த அழைப்பு, இயேசுவின் இதயத்தைத் தொடுவதாக இருந்தது. அவரின் தாழ்ச்சி, நமக்கு, கோவிலில் செபித்த ஆயக்காரரையும், தந்தையிடம் திரும்பி வந்த, காணமல்போன மகனையும் நினைவூட்டுகிறது. நாமும் இரக்கத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்டு, நம் வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியும், அவரின் வாக்குறுதியை நம்பியவர்களாக, இறைவனை நோக்கி திரும்பவேண்டும் என அழைப்பு விடுப்பதாக உள்ளது. நம் பாவங்களிலிருந்து, குற்றங்களிலிருந்து, நாம் செய்யத் தவறியவைகளிலிருந்து நம்மை மீட்டு, தன்னோடு தந்தையின் இல்லத்திற்கு நம்மை அழைத்துச் செல்லவே சிலுவையில் இறந்தார் இயேசு. தன்னால் மீடகப்பட்ட எதுவும் தொலைந்துவிடக் கூடாது என ஆவல் கொள்கிறார் இயேசு. அவரில் நம்பிக்கை கொள்வோர் அனைவருக்கும் இறையருள் எப்போதும் உள்ளதால் எவரும் மனம் கலங்கத் தேவையில்லை. நம் மரண நேரத்தில் நாம் அச்சம் கொள்ளவும் தேவையில்லை. நல்ல கள்வனைப்போல், நாம் இறைவனை நோக்கி முழு நம்பிக்கையுடன், 'இயேசுவே என்னை நினைவில் கொள்ளும்' என செபிப்போம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.