2017-10-25 16:07:00

பாசமுள்ளப் பார்வையில்.., : சிரமம் தீர்க்கும் தியாக முடிவுகள்


திருமணம் முடிந்து பத்து ஆண்டுகளாக அந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. உறவினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தே மனது வெறுத்துப் போனது தேவகிக்கு. யாராவது உறவினர் வீட்டிற்கு வந்தாலே பயப்படத் துவங்கி விடுவார் தேவகி. இந்த நிலையில், தேவகியின் கணவர் இராமுவின் அண்ணனுக்கு நான்கு குழந்தைகள். அந்தக் குழந்தைகள் வீட்டிற்கு வந்துவிட்டால் ஒரே கொண்டாட்டம்தான். அதிலும் குறிப்பாக, இராமுவின் அண்ணனின் மூன்றாவது மகன், கேசவனுக்கு சித்தப்பா, சித்தி என்றால் தனிப்பாசம். சனியும் ஞாயிறும் வீடு கலகலப்பாக இருக்கும். பிறகு, குழந்தைகளின் வருகைக்காக ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டும். உறவினர்கள் பலர் தேவகியிடம் கேலித்தொனியில் பேசினாலும், இராமுவின் அண்ணி மட்டும் எப்போதும்கூட பிறந்த அக்காவைவிட பாசமாகவே இருந்தது தேவகிக்கு ஆறுதலாக இருந்தது. அன்று புதன்கிழமை. திடீரென்று வீட்டிற்கு வந்தார் பிரேமா. 'என்ன அக்கா, திடீரென்று வந்திருக்கிறீர்கள்’, என தேவகி கேட்க, பிரேமாவோ, 'இல்லை தேவகி. உன்னிடம் ஒரு உதவி கேட்கத்தான் வந்தேன். உனக்குத் தெரியும், எனக்கு நாலு குழந்தைகள். நாங்கள் இருவரும் வேலைக்குப் போகிறோம். பிள்ளைகளைக் கவனிப்பது சிரமமாக இருக்கிறது. அதனால் ஒரு பிள்ளையை, அதாவது, கேசவனை உன் வீட்டில் விட்டு, இங்கு படிக்க வைக்கலாம் என்று இருக்கிறேன். உனக்கு எதுவும் ஆட்சேபனை இருக்கா. இராமுவிடம் பேசிவிட்டு முடிவைச் சொல்’, என்று தயங்கித் தயங்கி கூறினார். தேவகிக்கோ மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. 'என்ன அக்கா, இதில் இராமுவிடம் கேட்க என்ன இருக்கிறது? எப்போது பிள்ளையைக் கொண்டு வந்து, விடப் போகிறீர்கள் என்று கேட்டார் தேவகி. இந்த வாரக் கடைசியில் நாங்கள் வரும்போது அவனை இங்கேயே விட்டு விட்டுப்போகிறோம், என்றார் பிரேமா. பிரேமாவுக்கும் அவள் கணவனுக்கும்தான் தெரியும், எதற்காக ஒரு பிள்ளையை இவர்களுக்கு விட்டுத்தர முன்வந்தார்கள் என்று.  வளர்க்க முடியாத சிரமத்தால் அல்ல, மாறாக, இராமுவும் தேவகியும் படும் மனஉளைச்சலைப் போக்க பிரேமாவும் அவள் கணவரும் பல நாள் சிந்தித்து எடுத்த தியாக முடிவு இது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.