2017-10-25 16:13:00

போதைப்பொருள் மறுவாழ்வு திட்டத்திற்கு திருத்தந்தை ஆதரவு


அக்.25,2017. பிலிப்பீன்சில் போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் தலத்திருஅவையின் திட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது முழு ஆதரவை அளித்துள்ளார் என்று, மனிலா கர்தினால் அந்தோனியோ லூயிஸ் தாக்லே அவர்கள் அறிவித்தார்.

தான் அண்மையில் வத்திக்கானில் திருத்தந்தையை சந்தித்தபோது இத்திட்டம் குறித்து திருத்தந்தையிடம் விளக்கியதாகவும், திருத்தந்தை அத்திட்டத்திற்கு ஊக்கமளித்தார் எனவும், கர்தினால் தாக்லே அவர்கள் தெரிவித்தார்.

பிலிப்பீன்சின் மனிலா உயர்மறைமாவட்டத்தின் பங்குத்தளங்களில், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் ஒத்துழைப்புடன் Sanlakbay என்ற இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட பயிற்சியில், இதுவரை குறைந்தது 12 பங்குத்தளங்களில், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களில் 132 பேர் ஆறு மாதப் பயிற்சியை முடித்துள்ளனர்.  இவர்களுக்கு உளவியல் பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.

பிலிப்பீன்சில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் அரசுத்தலைவர் Rodrigo Duterte அவர்களின் நடவடிக்கையின்கீழ், ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு தலத்திருஅவை அதிகாரிகளும், மனித உரிமை ஆர்வலர்களும், நிறுவனங்களும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

2015க்கும் 2016ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பிலிப்பீன்சில், 18 இலட்சம் பேர் போதைப்பொருள் பயன்பாட்டாளர்கள் என்று தெரியவந்துள்ளது.

ஆதாரம் : CBCP /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.