2017-10-26 16:01:00

சந்திப்பு கலாச்சாரம் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதை ஏற்பது


அக்.26,2017. “சந்திப்பு கலாச்சாரம் என்பது, நம் வேறுபாடுகளையும் தவிர்த்து, நாம் எல்லாரும் கடவுளின் பிள்ளைகள் என்பதை ஏற்பதாகும்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இவ்வியாழனன்று வெளியாயின.

மேலும், இத்தாலியின் காலியாரி (Cagliari) நகரில், இத்தாலிய கத்தோலிக்கர் நடத்தும் 48வது சமூக வார நிகழ்வுக்கு, தன் நல்வாழ்த்துக்கள் அடங்கிய காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நிகழ்வுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள, "நாம் விரும்பும் வேலை : சுதந்திரம், படைப்பாற்றல், பங்கேற்பு மற்றும் தோழமை" என்ற தலைப்பே, வேலையின்றி மாண்பு இல்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வியாழனன்று ஆரம்பித்துள்ள இந்த நான்கு நாள் நிகழ்வுக்கு அனுப்பியுள்ள செய்தியில், வேலை தேடிக்கொண்டிருக்கும், வேலையின்றி இருக்கின்ற, மற்றும் ஒரு மாதத்தில் சிலமணி நேரங்களே வேலை செய்கின்ற மக்களை நினைத்துப் பார்க்கிறேன், இவர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை.

ஏராளமான இன்னல்கள் மத்தியில், நம்பிக்கையின் பல்வேறு அடையாளங்கள் தெரிகின்றன என்றும், மனிதரின் நலன் மற்றும் நம் பொதுவான இல்லமாகிய பூமியைப் பாதுகாப்பது, வளர்ச்சி என்ற பெயரில் இடம்பெறும் சுற்றுச்சூழல் அழிவால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இத்தாலிய சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு, இந்த சமூக வாரம் ஒரு சுமுகமான தீர்வுகளைப் பரிந்துரைக்கும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணொளிச் செய்தியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.