2017-10-26 15:53:00

பன்னாட்டு விண்வெளி நிலைய வீரர்களுடன் திருத்தந்தை உரையாடல்


அக்.26,2017. பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலையத்தில், ஆய்வுப் பணியாற்றும் விண்வெளி வீரர்களுடன் இவ்வியாழன் மாலையில் நேர்காணல் உரையாடல் ஒன்றை நடத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நேர்காணல் உரையாடலில், விண்வெளி நிலையத்தில் ஆய்வு நடத்துபவரில் ஒருவரான Paolo Nespoli அவர்களிடம் திருத்தந்தை இத்தாலியத்தில் கேள்வி கேட்க, Nespoli அவர்கள், இத்தாலிய மொழியிலும், ஏனையோர் மற்ற மொழிகளிலும் பதில் சொன்னார்கள். இக்குழுவில் ஆறு பேர் இருந்தனர்.

முதலில் தனது வணக்கத்தையும், வாழ்த்தையும் தெரிவித்த திருத்தந்தை, நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே செல்கிறோம் என்று பொதுவாக நம்மில் கேள்விகள் எழுகின்றன, இவை பற்றி விண்வெளி வீரர்களாகிய நீங்கள் தியானிக்கின்றீர்களா, Nespoli அவர்களே, இப்புவியில் மனிதரின் இடம் என்னவென்று தாங்கள் கருதுகின்றீர்கள் என்று கேட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வுரையாடலில் மேலும் பல கேள்விகளையும் கேட்டார் திருத்தந்தை.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2011ம் ஆண்டில், வத்திக்கான் நூலகத்திலிருந்து, பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலைய வீரர்களுடன் முதன் முறையாக நேர்காணல் உரையாடல் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியைச் சுற்றிவரும் இந்த விண்வெளி ஆய்வு நிலையத்தில், இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு நாளும் மனிதர் வாழத் தொடங்கினர். மனிதர் விண்வெளியில் வாழும்போது அவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை, அறிவியலாளர்கள் இங்கு ஆய்வு செய்கின்றனர். இந்த ஆய்வு நிலையத்தில் 53 விண்வெளி வீரர்கள் பணியாற்றுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.