2017-10-27 15:25:00

ஆப்ரிக்காவின் வருங்காலம் இளையோர் கையில், கர்தினால் பிலோனி


அக்.27,2017. ஆப்ரிக்கக் கண்டத்தின், உகாண்டா திருஅவையின் மற்றும் உள்ளூர் சமூகங்களின் ஆன்மீக வருங்காலமும், ஏனையக் கூறுகளும், வெளிநாடுகளின் தூதுரைப் பணியாளர்களையோ, ஐரோப்பாவின் அல்லது ஏனைய கண்டங்களின் மனித முன்னேற்ற நிறுவனங்களையோ அல்ல, மாறாக, உகாண்டாவின் வருங்காலத் தலைமுறைகளைச் சார்ந்து உள்ளன என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

உகாண்டா நாட்டுத் தலைநகர் Kampalaவிற்கு மூன்று நாள் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டுள்ள, நற்செய்தி அறிவிப்பு பேராயத் தலைவர் கர்தினால் பெர்னான்டோ பிலோனி அவர்கள், இவ்வெள்ளி காலையில், சிறாரையும் இளையோரையும் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

உகாண்டா நாட்டு சிறாருக்கும் இளையோருக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நல்வாழ்த்துக்களை முதலில் தெரிவித்த கர்தினால் பிலோனி அவர்கள், உகாண்டா திருஅவையும், சமுதாயமும் இந்த இளம் தலைமுறைகளில் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளன என்று கூறினார்.

கல்வி, கடின உழைப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக கிறிஸ்தவ விசுவாசத்திற்குச் சான்று பகர்தல் ஆகியவற்றுக்குத் தங்களை அர்ப்பணிப்பதன் வழியாக, சமுதாயத்தில் நேர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்த முடியும் என்றும், இளையோரிடம் கூறினார், கர்தினால் பிலோனி.

உகாண்டா மறைசாட்சிகளில் பெரும்பாலானவர்கள், இளம் வயதினர் எனவும், இவர்களே, உகாண்டா திருஅவையின் அடிக்கல்கள் எனவும் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் பிலோனி அவர்கள், இறையழைத்தலை தேர்ந்து தெளியுமாறும், வாழ்வில் சரியானவைகளுக்கு முன்னுரிமை கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். 

Kampala உயர்மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டை முன்னிட்டு இந்த 

மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டுள்ளார், கர்தினால் பிலோனி. இப்பயணம் வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.