2017-10-27 16:04:00

தட்டம்மையால் இறப்பவரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது


அக்.27,2017. உலகில் தட்டம்மையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், 2016ம் ஆண்டில், இந்நோயால் 90 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று ஐ.நா. நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

உலக நலவாழ்வு நிறுவனங்கள் இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தட்டம்மையால், இரண்டாயிரமாம் ஆண்டில் 5 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட இறப்புகள் இடம்பெற்றன, அது கடந்த ஆண்டில் 84 விழுக்காடாகக் குறைந்துள்ளது எனத் தெரிய வருகிறது.    

இதன்படி, உலகளவில், தட்டம்மை இறப்புகள் ஆண்டுக்கு ஒரு இலட்சம் வீதம், முதல் முறையாகக் குறைந்துள்ளன என்றும், தட்டம்மை தடுப்பூசிகள் வழியாக, ஆண்டுக்கு 13 இலட்சம் பேரின் வாழ்வு காப்பாற்றப்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து, 550 கோடி தட்டம்மை தடுப்பூசிகள் சிறார்க்கு போடப்பட்டுள்ளன, இதனால் 2 கோடியே 40 இலட்சம் சிறாரின் வாழ்வு காப்பாற்றப்பட்டுள்ளது எனவும் இந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை வெளியிட்ட, தட்டம்மை மற்றும் Rubella அமைப்பின் (M&RI) மருத்துவர் Robert Linkins அவர்கள், உலகில் தட்டம்மையை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

M&RI அமைப்பு, அமெரிக்க செஞ்சிலுவை சங்கம், அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம், யுனிசெப், WHO நிறுவனம் ஆகியவற்றுடன் சேர்ந்து பணியாற்றுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.