2017-10-28 15:27:00

ஐரோப்பா பற்றி மீண்டும் சிந்தித்து பார்த்தல் கூட்டம்


அக்.28,2017. ஐரோப்பா தற்போது எதிர்நோக்கும் சவால்களுக்கு மத்தியில், அக்கண்டம் சோர்ந்துபோய், வயதாகி வருகிறது போன்ற ஒரு பொதுவான எண்ணத்தை கொடுத்துள்ளது என்று, திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், வத்திக்கானில் இடம்பெறும் உயர்மட்ட அளவிலான ஐரோப்பிய கூட்டம் ஒன்றில் கூறினார்.

ஐரோப்பா பற்றி மீண்டும் சிந்தித்து பார்த்தல் என்ற தலைப்பில், இவ்வெள்ளி மாலையில் வத்திக்கானில் ஆரம்பித்த கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், ஐரோப்பாவின் வருங்காலத்தில், திருப்பீடம் எப்போதும் கருத்தாய் உள்ளது என்று கூறினார்.

அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய அவை நாடுகளின் தலைவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய உரையில் பரிந்துரைத்த நான்கு கோட்பாடுகள் பற்றி முதலில் விளக்கிய கர்தினால் பரோலின் அவர்கள், ஒருங்கிணைப்பதற்கும், உரையாடலுக்கும், உருவாக்குவதற்கும் ஐரோப்பா கொண்டிருக்கும் திறமைகளைச் சார்ந்தே, புதிய மனித சமுதாயத்தை உருவாக்கும் திறனை அக்கண்டம் கொண்டிருக்கும் என்று தன் உரையில் குறிப்பிட்டார்.

கடந்த பத்து ஆண்டுகளில், ஐரோப்பா எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி, புலம்பெயர்வோர் பிரச்சனை, மத்திய கிழக்கில் மட்டுமல்லாமல் பிற பகுதிகளிலும் இடம்பெறும் சண்டைகள், தேசியவாதத்திற்குத் திரும்பச் செல்லும் போக்கு, வேலைவாய்ப்பின்மை, இளையோர் எதிர்கொள்ளும் நெருக்கடி, சுற்றுச்சூழல் மாசுகேடு போன்ற  விவகாரங்களைச் சுட்டிக்காட்டினார், கர்தினால் பரோலின்.

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில், வருங்காலத்தை எவ்வாறு நாம் அமைக்கப் போகிறோம், வருங்காலத்தின்மீது எவ்வாறு நம்பிக்கையை ஏற்படுத்தப் போகிறோம் போன்ற கேள்விகளை எழுப்பினார் கர்தினால் பரோலின்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்கின்ற ஒவ்வொருவரும், அவரவரின் பொறுப்புக்களுக்கு ஏற்ப, பொதுநலனைக் கட்டியெழுப்பவும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் செயல்படுவதற்கு அழைப்பு விடுக்கப்படுகின்றனர் என்றும் தன் உரையில் வலியுறுத்தினார், திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின்.

திருப்பீடச் செயலகத்தின் உதவியுடன், COMECE என்ற ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு வத்திக்கானில் நடத்தும் இக்கூட்டத்தில், ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர், உதவித் தலைவர் உட்பட ஐரோப்பிய ஒன்றிய அவை நாடுகளின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள், கத்தோலிக்க மற்றும் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள், கல்வியாளர்கள் போன்றோர் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.