2017-10-28 15:14:00

செய்தியாளர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட யுனெஸ்கோ


அக்.28,2017. உலகில் செய்தியாளர்கள் கொலைசெய்யப்படும் விவகாரங்களில் 90 விழுக்காடு தண்டிக்கப்படாமலே விடப்படுகின்றது என்றும், செய்தியாளர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமென்றும் யுனெஸ்கோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தியாளர்களுக்கு எதிரான குற்றங்கள் ஒழிக்கப்படுவதை வலியுறுத்தும் உலக நாள், நவம்பர் 2ம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்றது. இதையொட்டி, செய்தி வெளியிட்டுள்ள யுனெஸ்கோ நிறுவன இயக்குனர் இரினா பொக்கோவா அவர்கள், ஒரு சுதந்திரமான சமுதாயத்திற்கு நீதியே மூலைக்கல் என்று கூறியுள்ளார்.

2006ம் ஆண்டுக்கும், 2016ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 930 செய்தியாளர்களும்,  2016ம் ஆண்டில் மட்டும், இவர்களில் 102 பேரும்  கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்று, யுனெஸ்கோ தயாரித்துள்ள, பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் பற்றிய அறிக்கை கூறியுள்ளது.

2016ம் ஆண்டில் கொல்லப்பட்டுள்ள செய்தியாளர்களில் 94 விழுக்காட்டினர், உள்ளூர் நிகழ்வுகளை வழங்கிய உள்ளூர் செய்தியாளர்கள் என்றும், இக்கொலைகளில் பாதி, ஆயுதம் தாங்கிய மோதல்கள் இடம்பெறாத நாடுகளில் இடம்பெற்றுள்ளது என்றும் யுனெஸ்கோ அறிக்கை கூறுகிறது.

இந்த உலக நாளை நினைவுகூரும்விதமாக, வருகிற டிசம்பர் 4ம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் ஒருநாள் கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது யுனெஸ்கோ.

2013ம் ஆண்டில் ஐ.நா. பொது அவையால் இந்த உலக நாள் அறிவிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.