2017-10-28 14:32:00

பொதுக்காலம் 30ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை


ஆசிரியர் ஒருவர் தன்னிடம் பயிலும் மாணவனைப்பற்றி அவனது தந்தையிடம் முறையிட்டார்: "ஐயா! ஒங்க பையன் வகுப்புல சரியாவே பதில்சொல்ல மாட்டேங்கறான். இன்னக்கி அவன்கிட்ட 'கம்பராமாயணத்தை எழுதியது யார்'ன்னு கேட்டேன். அதுக்கு உங்க மகன் 'திருவள்ளுவர்'ன்னு சொல்றான்" என்று ஆசிரியர் முறையிட்டதும், தந்தை அவரிடம், "சார், கோவிச்சுக்கக்கூடாது. நீங்க 'திருக்குறள எழுதுனது யார்'ன்னு கேட்டிருந்தா, என் பையன் 'திருவள்ளுவர்'ன்னு சரியா பதில் சொல்லியிருப்பான். நீங்க கேள்வியைத் தப்பா கேட்டுட்டீங்க" என்று சொன்னார். சிரிக்க மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைக்கும் துணுக்கு இது. தப்பான கேள்விகள் கேட்கமுடியுமா என்று சிந்திக்க வைக்கும் இத்துணுக்கு, இன்றைய ஞாயிறு சிந்தனையைத் துவக்கி வைக்கின்றது.

"சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?" (மத்தேயு 22:17) என்ற கேள்வி, சென்ற ஞாயிறு நற்செய்தியில் இயேசுவிடம் தொடுக்கப்பட்டது. "போதகரே, திருச்சட்ட நூலில் தலை சிறந்த கட்டளை எது?" (மத்தேயு 22:34) என்ற கேள்வி, இந்த ஞாயிறு நற்செய்தியில் இயேசுவிடம் தொடுக்கப்படுகிறது. இவை இரண்டும், அறிவை வளர்த்துக்கொள்ள தொடுக்கப்பட்ட கேள்விகள் அல்ல. மாறாக, பரிசேயர், சதுசேயர், ஏரோதியர் ஆகியோர் அரசியல் கூட்டணி அமைத்து, இயேசுவுக்கு எதிராக ஆரம்பித்த ஓர் அரசியல் விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட பகடைக் காய்களாக இக்கேள்விகள் அமைந்தன.

ஐயங்களை அகற்ற, அறிவை வளர்க்க கேட்கப்படும் கேள்விகள் பயனுள்ளவை. அதற்கு மாறாக, தனக்குத் தெரிந்தது, அடுத்தவருக்குத் தெரியாது என்பதை பறைசாற்ற கேள்விகள் கேட்பது, ஆபத்தில் சிக்கவைக்கும். அச்சூழல்களில் அறிவை வளர்க்கும் கேள்வி-பதில் பரிமாற்றத்தை விட, நீயா, நானா, யார் பெரியவன் என்ற பரிதாபமான அகந்தை அரங்கேறும்.

இயேசுவின் வாழ்வில் இதுபோன்ற ஒரு சூழல் உருவானதை இன்றைய நற்செய்தியில் மீண்டும் ஒருமுறை பார்க்கிறோம். தனக்குத் தெரியும் என்ற இறுமாப்பில் இயேசுவை அணுகி கேள்வி கேட்ட ஓர் அறிஞரைப் பற்றி இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில் நாம் வாசிக்கிறோம். தவறான, குதர்க்கமான எண்ணங்களுடன் திருச்சட்ட அறிஞர் கேள்வி கேட்டாலும், அக்கேள்வி மிக அழகான, ஆழமான ஒரு கேள்வி என்பதை இயேசு உணர்ந்து, அதற்கு பதில் தருகிறார். என்ன ஒரு பதில் அது! இயேசு தந்த பதில், காலத்தால் அழியாத ஒரு பதில். மனித குலத்தின் அடிப்படை உண்மையாய், கிறிஸ்தவ மறையின் உயிர்த்துடிப்பாய் இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக, நம் அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ள ஒரு பதிலை இயேசு தருகிறார்.

மத்தேயு நற்செய்தி 22: 36-40

திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார். இயேசு, “‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து’. இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்று பதிலளித்தார்.

அனைத்து மதங்களும் இறையன்பையும், பிறரன்பையும் வலியுறுத்துகின்றன. இவை இரண்டும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்றும் நாம் அடிக்கடி சொல்கிறோம். இயேசு கூறிய இந்த பதில் மொழியில், "உன் மீது நீ அன்பு கூர்வதுபோல..." என்ற சொற்றொடர் நம் கவனத்தை ஈர்க்கிறது. இறைவன் மீது காட்டப்படும் அன்புக்கு, இயேசு கூறும் அளவுகோல், முழுமை. முழுமையான இதயம், உள்ளம், மனம் ஆகியவற்றால் இறைவன் மீது அன்புகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். அயலவர் மீது காட்டப்படும் அன்புக்கு, அளவுகோல், ஒருவர் தன் மீது காட்டும் அன்பு. தன் மீது அன்பு கொள்ளவோ, மதிப்பு காட்டவோ இயலாத ஒருவரால், அடுத்தவர் மீதும் அன்பு காட்ட முடியாது என்பது, இயேசு நமக்கு சொல்லாமல் சொல்லித்தரும் பாடம்.

நம் மீது நாம் அன்பு கொள்வதற்கு, நம்மைப்பற்றிய ஆழமான புரிதல் மிகவும் அவசியம். "உன்னையே நீ அறிவாய்" (“know thyself”, “gnothi seauton”) என்பது, உண்மை அறிவைப் பெறுவதற்கு, கிரேக்கர்கள் கூறிய தலைசிறந்த வழி. எனவேதான், கோவில் முகப்பில் அந்த வார்த்தைகளைப் பொறித்து வைத்தனர். தன்னறிவு பெற்று, தன்னையே அன்புகூரும் ஒருவருக்கு, அடுத்தவர் மீதும் அன்புகூர்வது எளிதாகும். தன்னையும், அடுத்தவரையும் அன்புகூர்வது, ஆண்டவரை அன்புகூர அழைப்பு விடுக்கும். இதையே, தலைசிறந்த கட்டளை என்று இன்றைய நற்செய்தியில் இயேசு வலியுறுத்தியுள்ளார்.

தன்னறிவு பெறுவதற்கு, அமைதி, ஆழ்நிலை தியானம், ஆகியவை அவசியம். அந்த அமைதியின் சிகரமாக, இறைவனை உணர்ந்து, அவர் மீது அன்பு கொள்வதும் சாத்தியமாகும். ஆனால், அமைதி, தியானம், செபம் ஆகியவற்றை புறந்தள்ளி, இவ்வுலகை சப்தம், சந்தடிகளால் நிறைப்பதே, இன்றைய வர்த்தக உலகின் ஒரே முயற்சியாக உள்ளது. நம்முடன், நம் குடும்பங்களுடன் நாம் தரமான, நிறைவான முறையில் நேரத்தை செலவழிப்பதற்குப் பதில், எப்போதும், நம் கரங்களில் தொடர்பு சாதன கருவிகளைத் திணித்து, அவை உருவாக்கும் சந்தடிகளில் நம்மையே இழப்பதற்கு இவ்வுலகம் நமக்குச் சொல்லித்தருகிறது.

இந்த சப்தங்களால் நிறைந்து, நம்மையே அவற்றில் இழந்து, நம்மைப்பற்றிய சரியான புரிதல் ஏதுமின்றி நாம் வளர்ந்து வருகிறோம். நாம் ஒவ்வொருவரும் உயர்வானவர்கள், தனித்துவம் மிக்கவர்கள் எனவே, அன்புக்கும், மதிப்பிற்கும் உரியவர்கள் என்ற எண்ணங்களையெல்லாம், அழித்துவிட்டு, அனைவரையும் ஒருசில வெளிப்புற அடையாளங்களால், ஆட்டுமந்தைகளைப் போல், தொழில்சாலைகளிலிருந்து வெளியே வரும் ஒரே அளவான பொருள்களைப்போல் மாற்ற முயல்கிறது நமது வர்த்தக உலகம். குறிப்பாக, உலகின் அனைத்து இளையோரிடையே, சுயமாக சிந்திக்கும் திறமைகளை நீக்கி, ஒரே உலகக் குடும்பம் என ‘காட்டும் முயற்சிகள்’ வர்த்தக உலகால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பயன்படுத்தும் கருவிகள், உடுத்தும் உடைகள், உண்ணும் உணவு வகைகள், பயன்படுத்தும் சொல்லாடல்கள் ஆகியவற்றால் நாம் ஒரே குடும்பமாக இணைந்துவிட்டோம் என்று வர்த்தக உலகம் சொல்வது பொய் என்பதை நிரூபிக்க, நமக்குள் வளர்ந்துவரும் பிரிவினை உணர்வுகள் சாட்சிகளாக உள்ளன. நாம் வாழும் 21ம் நூற்றாண்டில், பிளவுகளும், பிரிவுகளும் கூடி வருகின்றனவே ஒழிய, குறைவதாகத் தெரியவில்லை. பல்வேறு கருவிகள் மூலம் உறவுகளை வலுப்படுத்துவதாகச் சொல்லும் தொடர்பு சாதன உலகம், அதே வேளையில், உண்மையான, நேருக்கு நேரான உறவுகளிலிருந்து நம்மைப் பிரித்து, சுயநலச் சிறைகளுக்குள் தள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. தொடர்புசாதனக் கருவிகள் புடைசூழ, சுயநலச் சிறைகளுக்குள் நாளுக்கு நாள் இன்னும் வலுவாக நம்மை நாமே பூட்டிக் கொள்வதால், 'அடுத்திருப்பவர்' மீது அன்பு காட்டமுடியாமல், அவர்களை, அன்னியர்களாக, பகைவர்களாக காணும் கண்ணோட்டம் வளர்ந்துவருகிறது என்பது, வேதனை தரும் உண்மை.

அனைவரும் அன்னியராக மாறிவருவதால், ஒருவரையொருவர் வெல்வதும், கொல்வதும் நாளுக்கு நாள் கூடிவருகின்றன. இந்தக் கொலைவெறியால், அனாதைகளின், கைம்பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இச்சூழலில், அன்னியர், அநாதை, கைம்பெண் இவர்களைப்பற்றி சிந்திப்பதற்கு இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கிறது. அதுவும், இங்கு கூறப்பட்டுள்ள வார்த்தைகள் யாவும் இறைவனே நம்மிடம் நேரடியாகக் கூறும் வார்த்தைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. கடவுள் தரும் அழைப்பு ஓர் எச்சரிக்கையாக, கட்டளையாக ஒலிக்கிறது.

விடுதலைப் பயணம் 22: 20-27

ஆண்டவர் கூறியது:... அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப்படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராயிருந்தீர்கள். விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்... உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே. பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு. ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை. உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே. வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்? அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன். ஏனெனில் நான் இரக்கமுடையவர்.

நமது கடமைகளைப் பற்றி, நாம் ஆற்றவேண்டிய பணிகளைப் பற்றி இறைவன் இதற்கு மேலும் தெளிவாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அன்னியர், கைம்பெண்கள், ஆதரவற்றோர் ஆகியோரை நாம் உடன்பிறந்தோராகக் காணவேண்டும் என்று இறைவன் விடுக்கும் இந்த எச்சரிக்கையைக் கேட்கும்போது, யூதப் பாரம்பரியத்தில் சொல்லப்படும் புகழ்பெற்ற ஓர் உவமை நம் நினைவில் நிழலாடுகிறது. இந்த உவமையுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.

வயது முதிர்ந்த யூதகுரு ஒருவர் தன் சீடர்களிடம், "உலகில் தேவையான அளவு ஒளி உள்ளதென்று எப்போது சொல்லமுடியும்?" என்று கேட்டார். முதல் சீடர், "ஒரு வேப்பமரத்திற்கும் ஒரு புளிய மரத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் காண முடிந்தால், தேவையான அளவு ஒளி உள்ளதென்று சொல்லலாம்" என்று பதில் சொன்னார். குரு உடனே, "அது தேவையான அளவு ஒளி அல்ல" என்று சொன்னார். இரண்டாவது சீடர், "ஒரு செம்மறி ஆட்டையும், வெள்ளாட்டையும் வேறுபடுத்திப் பார்க்க முடிந்தால், தேவையான அளவு ஒளி உள்ளதென்று சொல்லலாம்" என்று பதில் சொன்னார். அதற்கும் அந்த குரு, "அது தேவையான அளவு ஒளி அல்ல" என்ற அதே பதிலைச் சொன்னார். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த பதிலையெல்லாம் சொல்லிவிட்டதால், சீடர்கள் அனைவரும் குருவின் பதிலுக்குக் காத்திருந்தனர். அப்போது குரு அவர்களிடம், "மனிதர்கள் ஒருவர் மற்றவரின் முகத்தைப் பார்க்கும்வேளையில், எப்போது அங்கு ஒரு சகோதரனையோ, சகோதரியையோ அவர்களால் அடையாளம் காணமுடிகிறதோ, அப்போதுதான் இவ்வுலகில் தேவையான அளவு ஒளி உள்ளதென்று சொல்லலாம்" என்று கூறினார்.

வெறுப்பு என்ற இருளில் மூழ்கிவரும் நம் உலகில், இறையன்பு, பிறரன்பு என்ற கதிரவன் ஒளி வீசவேண்டும் என்று மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.