2017-10-28 15:14:00

மனிதரின் மாண்பை பாதுகாப்பது அறநெறி சார்ந்த கடமை


அக்.28,2017. போரிடுகின்றவர்கள், மனிதாபிமானப் பணியாளர்கள் போன்ற எல்லாரும், உலகளாவிய மனித உரிமைக் கோட்பாடுகளை தங்களின் மனசாட்சிகளில் இருத்தி, அவற்றை செயல்களில் வெளிப்படுத்துமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று அழைப்பு விடுத்துள்ளார்.

பன்னாட்டுச் சட்டத்தின் ஐரோப்பிய கழகம் உரோம் நகரில் நடத்திய, மூன்றாவது உலகளாவிய மனிதாபிமானச் சட்டம் கருத்தரங்கில் கலந்துகொண்ட ஏறக்குறைய 250 பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமை நண்பகலில் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித உரிமைகள் மீறப்படும் இடங்களில், குறிப்பாக, அவை அச்சுறுத்தப்படும் இடங்களில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதரின் மாண்பு மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுப்பது, ஒவ்வொருவரின் அறநெறி சார்ந்த கடமையாகும் என்று கூறினார்

ஆயுத மோதல்களில் பாதிக்கப்படுகின்றவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக, ஜெனீவாவில் மேலும் இரு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாம் ஆண்டு நிறைவில், இக்கருத்தரங்கு நடைபெற்றது மிகவும் முக்கியமானது என்றும் திருத்தந்தை கூறினார்.

இக்காலத்தில் இடம்பெறும் போர்கள், கடும் குற்றங்கள் போன்றவற்றால் மனிதரின் மாண்பும், உரிமைகளும் மீறப்படுகின்றன என்றும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும் தாக்கப்படுவதன் வழியாக சமய சுதந்திரம் மீறப்படுகின்றது என்றும் திருத்தந்தை கவலை தெரிவித்தார்.

போர்களின்போது, நம் சகோதர சகோதரிகள் உயிரை இழக்கின்றனர், உறுப்புகள் துண்டிக்கப்படுகின்றன, தலைகள் வெட்டப்படுகின்றன, அவர்கள் சித்ரவதைப்படுத்தப்பட்டு, சிலுவையில் அறையப்படுகின்றனர், அதன்பின் அவர்களின் உடல்கள் அவமானப்படுத்தப்படுகின்றன, மக்கள் வழிபட்டுக் கொண்டிருக்கும்போதே தாக்கப்படுகின்றனர்.. இவ்வாறு மக்களின் அடிப்படை மனித உரிமைகளும் மாண்பும் கடுமையாய் மீறப்படுகின்றன என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அதேநேரம், பாதிக்கப்படும் மக்களுக்கு, திருஅவை மற்றும் ஏனைய அமைப்புகள் உடனடியாக உதவி செய்வதையும், சிறைகளுக்குச் சென்று கைதிகளை மக்கள் சந்திப்பதையும் பாராட்டி ஊக்கப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சண்டைகள் இடம்பெறும் இடங்களில் அப்பாவி பொதுமக்களைப் பாதுகாத்தல், மனிதாபிமான நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் சமூகங்களின் பொறுப்பு என்ற தலைப்பில், இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கு, இவ்வெள்ளி, சனி தினங்களில் உரோம் நகரில் நடைபெற்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.