2017-10-30 16:00:00

காயங்களை தொட்டுக் குணப்படுத்துபவரே நல் மேய்ப்பர்


அக்.30,2017. ஒதுக்கப்பட்டோரையும், காயமுற்றோரையும் நெருங்கிவந்து அவர்களைத் தொட்டு, குணப்படுத்துபவரே நல்லாயன் என இத்திங்கள் திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

காயமுற்றோரையும் ஒதுக்கப்பட்டோரையும் தொட்டுத் தூக்குவதில் வெட்கப்படாதவரே நல்ல மேய்ப்பராக இருக்கமுடியும் என, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கிய திருத்தந்தை, தொலந்துபோன ஆட்டைத் தேடிச்செல்லும் நல்லாயனை எடுத்துக்காட்டாகக் கொண்டு, நல்ல மேய்ப்பர்கள், எப்போதும் தங்கள் மக்களுக்கு அருகாமையிலேயே இருப்பார்கள் என்றார்.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த குருக்களும், சட்ட வல்லுனர்களும் பரிசேயர்களும், சதுசேயர்களும் மக்களிடமிருந்து விலகி வாழ்ந்ததோடு, கோவில் வழிபாடுகளோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதென வாழ்ந்தவர்கள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவோ, எப்போதும் ஏழைகள் மற்றும் பாவிகளின் அருகாமையிலேயே இருந்தார் என்றார்.

இயேசு, நோயாளிகளின் அருகாமையில் மட்டும் இருக்கவில்லை, அவர்களைத் தொட அவர் வெட்கப்படவில்லை, தொட்டே குணமாக்கினார் எனவும் கூறினார் திருத்தந்தை.

அதிகாரத்திற்கும் செல்வத்திற்கும் அருகாமையில் வாழ நினைக்கும் தீய மேய்ப்பர்களின் மத்தியில், தன்னையே வெறுமையாக்கி, பணியாளனாய் வடிவெடுத்த இயேசு, நமக்கு நிறையக் கற்றுத் தருகிறார் என மேலும் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.