2017-10-30 16:26:00

நில நடுக்கங்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்


அக்.30,2017. "இன்றைய சிரமங்களால் வீழ்த்தப்படாமல், வருங்காலம் குறித்த நம்பிக்கையுடன், முன்னோக்கி நடைபோடுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஊக்கமளிப்பதாக, இத்தாலியின் நோர்ச்யா பகுதியில் இஞ்ஞாயிறன்று நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

இத்தாலியின் உம்ப்ரியா, மார்க்கே மற்றும் லாட்சியோ மாநிலப் பகுதிகளில் கடந்த ஆண்டு இடம்பெற்ற நில நடுக்கங்களின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி, நில நடுக்கத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நோர்ச்சியா நகரின் முக்கிய வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், நமக்கு அடுத்திருப்பவர்களிடம் அன்புகூர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, கடவுள் மீது நாம் அன்புகூரவில்லையெனில், ஒருவர் மற்றவர் மீது நாம் உண்மையான அன்பு காட்ட முடியாது எனவும் எடுத்துரைத்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் இடம்பெற்ற நில நடுக்கத்தைத் தொடர்ந்து, தாராள மனப்பான்மையுடன் எண்ணாற்றோர் உதவிச் செய்ய முன்வந்தததைக் குறித்தும் எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், தங்கள் பொருட்களையும், நேரத்தையும் கொடுத்து உதவிய நல் மனதோரையும், மக்கள் பாதுகாப்பு அமைப்புக்களையும் நன்றியுடன் நினைவுகூர்வதோடு, திருஅவை அமைப்புக்களுக்கும் நன்றியை வெளியிடுவதாகத் தெரிவித்தார்.

இடிந்துபோன நோர்ச்சியா பசிலிக்காப் பேராலயத்தைக் கட்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றிப்பு அவை உதவிகளை வழங்க முன்வந்தது, ஐரோப்பாவில் கிறிஸ்தவம், மற்றும், அது வளர்த்துவிட்ட கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதாக இருந்தது என மேலும் கூறினார் கர்தினால் பரோலின்.

இயற்கைப் பேரிடர் இடம்பெற்ற சிறிது நாட்களிலேயே பல்வேறு அமைப்புக்களும், தனி நபர்களும், பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதில் காட்டிய அதே ஆர்வம் இன்னும் தொடரவேண்டும் எனவும், இப்பகுதி மக்களுக்கு ஆற்றவேண்டிய உதவிகள் இன்னும் அதிகம் உள்ளன எனவும், மேலும் கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்.

ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 11 மணிக்கு, நோர்ச்சியாவின் புனித பெனெதெத்தோ வளாகத்தில் இடம்பெற்ற திருப்பலியில் Spoleto பேராயர் Renato Boccardo அவர்கள், கர்தினால் பரோலின் அவர்களை வரவேற்றுப் பேசியதோடு, திருத்தந்தையின் ஊக்கத்திற்கும் உதவிகளுக்கும் விசுவாசிகளின் நன்றியை தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.