2017-10-30 14:45:00

வாரம் ஓர் அலசல் – அன்புக்கு விலை அன்பே


அக்.30,2017.  உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் விளையாட்டு வீரர் ஆர்த்தர் ஆஷ் (Arthur Ashe) அவர்கள், எயிட்ஸ் நோயால் இறந்து கொண்டிருந்தார். 1983ம் ஆண்டில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தபோது ஏற்றப்பட்ட, HIV கிருமிகள் கலந்த இரத்தமே இதற்கு காரணம். அச்சமயத்தில் அவரது இரசிகர்கள் பலர், அவருக்கு ஆறுதலாக கடிதங்கள் எழுதினர். அதில் ஒருவர், "இத்தகைய மோசமான ஒரு நோயால் நீங்கள் தாக்கப்பட, கடவுள் எப்படி உங்களைத் தேர்ந்தெடுத்தார்?" என்று ஆதங்கத்தோடு கேட்டிருந்தார். அக்கடிதத்திற்கு ஆர்த்தர் ஆஷ் அவர்கள், இவ்வாறு ஓர் அழகான, சிந்திக்க வைக்கும் ஒரு பதிலை எழுதியுள்ளார்.

ஐந்து கோடிச் சிறார் டென்னிஸ் விளையாடத் தொடங்கியுள்ளனர். ஐம்பது இலட்சம் பேர் டென்னிஸ் விளையாடக் கற்றுக்கொண்டுள்ளனர். ஐந்து இலட்சம் பேர், டென்னிஸ்ஸை முறையாகக் கற்றுக்கொண்டுள்ளனர். ஐம்பதாயிரம் பேர் விளையாட்டு அரங்கத்திற்கு வருகின்றனர். ஐந்தாயிரம் பேர் Grand Slam பெருவெற்றித் தொடர் டென்னிஸ் போட்டிகள் வரை எட்டியுள்ளனர். ஐம்பது பேர் விம்பிள்டன் வரை வந்துள்ளனர்.  நான்கு பேர் அரையிறுதியை எட்டியுள்ளனர். இருவர் இறுதி ஆட்டத்தை எட்டியுள்ளனர். எனது கையில் வெற்றிக் கோப்பையை உயர்த்தியபோது, "ஏன் நான்?" என்று ஒருபோதும் கடவுளை நான் கேட்டதில்லை. எனவே இப்போது நோயின் வேதனையில் இருக்கும்போது "ஏன் நான்?" என்று எப்படி என்னால் கேட்க முடியும்? மகிழ்ச்சி உங்களை இனிமையாகவும், சோதனைகள் உங்களை உறுதியாகவும் வைக்கின்றன. துன்பங்கள் உங்களை மனிதமிக்கவராகவும், தோல்வி உங்களை பணிவுள்ளவராகவும் ஆக்குகின்றன. வெற்றி உங்களை  ஒளிரச் செய்கின்றது. ஆனால் விசுவாசம் மட்டுமே உங்களை முன்னோக்கிச் செல்ல வைக்கின்றது. உலகில் பலர் கனவு கண்டுகொண்டிருக்கும்வேளையில் நீங்கள் வாழ்வில் சிலவேளைகளில் அதிருப்தியாக இருக்கலாம். வயலில் நிற்கும் குழந்தை, தனது தலைக்கு மேலே பறக்கும் விமானத்தைப் பார்த்து, பறப்பதுபோல் கனவு காண்கிறது. ஆனால் விமானத்தை ஓட்டும் விமானியோ வயலைப் பார்த்து, வீடு திரும்புவது பற்றி கனவு காண்கிறார். இதுதான் வாழ்க்கை. மகிழ்வாக இருங்கள். பணம்தான் வாழ்வின் இரகசியம் என்றால், பணக்காரர் தெருக்களில் நடனமாட வேண்டும். ஆனால் சிறாரே அதைச் செய்கின்றனர். அதிகாரம் பாதுகாப்பை உறுதி செய்கின்றது என்றால், பிரபலங்கள் பாதுகாப்பாளர்கள் இன்றி நடக்க வேண்டும். அழகும் புகழும் உண்மையான உறவுகளைக் கொண்டுவரும் எனில், பிரபலங்கள் சிறந்த திருமண வாழ்வைக் வாழ வேண்டும். ஆனால், நாம் காண்பது என்ன? எளிய வாழ்க்கை வாழ்பவர்களே நிம்மதியாக உறங்குகின்றனர். எனவே எளிமையாக வாழுங்கள். பணிவுடன் நடங்கள். உண்மையாக அன்புகூருங்கள்.      

வாழ்வின் அஸ்தமனத்தில் இருப்பவர்களின் இறுதி ஆசை, இறுதி கூற்று, இறுதி உரை, இறுதி வாக்குமூலம் போன்றவை மிகவும் முக்கியமானதாக கவனிக்கப்படுகின்றது. குடும்பங்களில் அந்த ஆசையை நிறைவேற்றி வைப்பதில் முனைப்பாய் இருக்கின்றார்கள். டென்னிஸ் வீரர் ஆர்த்தர் ஆஷ் அவர்கள் போன்று, பல பிரபலங்கள் எழுதிய மற்றும், உதிர்த்த இறுதி வார்த்தைகள் பற்றி நாம் அறிந்தே இருக்கிறோம். எத்தனையோ கோடி டாலர் சொத்துக்கு உரிமையாளரான, ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள், புற்றுநோயால் மிகவும் துன்புற்று மரணத்தைத் தழுவிக்கொண்டிருந்த நாள்களில் கூறிய இறுதி வரிகள் நமக்கெல்லாம் தெரியும்.

நான் வணிக உலகில் வெற்றியின் உச்சத்தை அடைந்திருக்கிறேன். பிறரின் பார்வையில் என் வாழ்வு வெற்றிகரமானது. எப்படியிருந்தாலும் என் பணிச் சுமைகளை எல்லாம் தாண்டி, நானும் வாழ்வில் சிறிது மகிழ்வை அனுபவித்திருக்கிறேன். பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை இறுதியில்தான் அறிந்து கொண்டேன். இதோ இந்த மரணநேரத்தில், என் முழுவாழ்வையும் திரும்பிப் பார்க்கும்போது, வாழ்வில் எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள், பணம், புகழ் எல்லாமே செல்லாக்காசாக, அர்த்தமற்றதாக, மரணத்தின்முன் தோற்றுப்போய் நிற்பதை உணர்கிறேன். இந்த இருளில் என் உயிரைத் தக்க வைக்க போராடிக் கொண்டிருக்கும் மருத்துவ இயந்திரங்களின் மெல்லிய சப்தங்கள் மட்டுமே காதுகளில் ஒலிக்கின்றன. கடவுளின் மூச்சுக்காற்றையும் மரணத்தையும் மிக அருகில் உணர்கிறேன். வாழ்வில் நாம் வாழ்வதற்குப் போதுமான பணம் சேர்த்தபின், பணத்திற்குத் தொடர்பில்லாத விடயங்களையும் சம்பாதிக்கத் தொடங்க வேண்டும் என்பது இப்போது புரிகிறது. அது உறவாகவோ, கலை வடிவமாகவோ, நம் இளமையின் கனவாகவோ இருக்கலாம். அதுதான் வாழ்வில் மிக முக்கியமானது. அதைவிட்டு பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஓடும் மனிதரின் வாழ்க்கை, என் வாழ்வுபோல முற்றிலும் வேறு திசையில் திரும்பி விடுகிறது. கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனதில் இருக்கும் அன்பை உணரச்செய்யும் சக்தியை கொடுத்திருக்கிறார். பணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும் எல்லா மகிழ்ச்சிகளும் வெறும் பிரமைகள்தான். நான் சேமித்த பணம் எதையும் இங்கு கொண்டுவர முடியாது. நான் மகிழ்ந்திருந்த என் நினைவுகள் மட்டுமே இப்போது என்னுடன் இருக்கின்றன. அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும். வாழ்வுக்கு எந்த எல்லைகளுமில்லை. எங்கு செல்ல ஆசைப்படுகிறீர்களோ அங்குச் செல்லுங்கள். தொட நினைக்கும் உயரத்தைத் தொட முயற்சி செய்யுங்கள். நீங்கள் வெற்றியடைவது உங்கள் எண்ணத்திலும் கைகளிலும்தான் உள்ளது. உங்கள் பணத்தை வைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால் அந்தப் பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை, யாரும் வாங்கிக் கொள்ளுமாறு செய்ய முடியாது. பணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்து விட்டால், மீண்டும் வாங்கிவிடலாம். ஆனால் நீங்கள் தொலைத்து, அதைப் பணத்தால் வாங்க முடியாது என்ற ஒன்று உண்டென்றால், அது உங்கள் வாழ்வுதான். வாழ்வில் எந்தக் கட்டத்தில் நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை, இப்போது வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள். நாம் நடித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை எனும் நாடகத்தின் திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு, மனைவிக்கு, நண்பர்களுக்கு, அன்பை வாரி வழங்குங்கள். உங்களை நீங்கள் மகிழ்வாக வைத்துக் கொள்ளுங்கள். அனைவரையும் மனமார அன்பு கூருங்கள்.

நாம் கேட்ட இந்த இரு பிரபலங்களும் வாழ்வு என்றால் என்ன என்பதைத் துல்லியமாக உணர்ந்து கொண்டவர்கள் என்பதை, இவர்களின் இறுதி எழுத்துக்கள் நமக்கு உணர்த்துகின்றன. வாழ்வில் எந்தக் குறையுமின்றி எல்லாவற்றையும் அனுபவித்த இவர்கள் சொல்கிறார்கள் - எளிமையாக வாழுங்கள். பணிவுடன் நடங்கள். உண்மையாக அன்புகூருங்கள். எல்லாரையும் உளமார அன்பு கூருங்கள் என்று. ஆனால் நம் சமுதாயங்களில் பல இடங்களில் அன்புக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதனால், இனத்தின் பெயரால், கடவுளின் பெயரால் சண்டைகள். மதத்தைச் சுட்டிக்காட்டி மதம்பிடித்த அட்டூழியங்கள், உணர்ச்சியற்ற உடன் பிறப்பு கொலைகள். இயற்கைக் கொலைகள், பல்வகை உயிரினக் கொலைகள்.. கந்துவட்டிக்காரர்களின் கொடுமைகள் தாங்க முடியாமல், ஓர் ஏழைக் கூலித் தொழிலாளி, தன் இரு குழந்தைகளையும் எரித்து, மனைவியோடு தன்னையும் எரிக்கத் துணிந்தது தமிழகத்தில்தானே. அதுவும் இது ஆட்சியாளர் அலுவலகத்தின் முன்னால்! எங்கே போனது மனிதம்? சமூக அன்பு எங்கே? மனம் பதைபதைக்கிறது. எப்போதும் இரு காதுகளை அடைத்துக்கொண்டு கைபேசிகளுடன் உரையாடும், உறவாடும் மனிதரால், எப்படி மனசாட்சி பேசுவதைக் கேட்க முடியும்? திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில், அன்பின்றி வாழ்வும் விசுவாசமும் வறண்டுபோகும். வாழ்வுக்கு எது முக்கியமானதோ அதனையே இயேசு போதித்தார், வாழ்ந்தார், அதுதான் அன்பு என்று கூறினார்.

“நாம் எல்லாரும் ஒவ்வொரு நாளும் ஏதாவது அன்புச் செயல் ஒன்றைச் செய்தால், நாம் இந்த உலகை சரியான திசையில் நடத்திச் செல்கிறோம் என்று அர்த்தம் (Martin Kornfeld)”. “உலகில் மிகவும் தெய்வீகமானது சக மனிதரிடம் நீங்கள் காட்டும் அன்பே (வால்டேர்)”. “உங்கள் அன்பை இரகசியமாக வைத்துக்கொண்டிராமல், அதை அன்புச் செயல்கள் மூலம் வெளிப்படுத்திக்கொண்டே இருங்கள் (இரவீந்திர நாத் தாகூர்)”. “அன்பை விற்கவோ வாங்கவோ முடியாது. ஏனென்றால் அன்புக்கு விலை அன்பே (ஜான் கீட்ஸ்)”. ஒருவர், சில நேரங்களில் இன்னல்களை எதிர்கொள்ளலாம். இதற்குக் காரணம் அவர் ஏதோ தவறு செய்வதால் அல்ல, மாறாக, அவர் ஏதோ சரியானதைச் செய்கிறார் என்பதாலே. இந்த உலகில் எந்த ஒரு மனிதரும், தான் பெற்றதை வைத்து மதிப்பு அடைவதில்லை. மாறாக, அவர் பிறருக்கு என்ன கொடுத்தாரோ அதை வைத்தே எப்போதும் மதிக்கப்படுகிறார். பிரபலங்கள் சிலரின் இந்தக் கூற்றுகள், நம் வாழ்வுக்கு உயிர் தருபவை. அன்புக்கு விலை அன்பே.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.