2017-11-01 15:08:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : எத்தியோப்பியாவில் கிறிஸ்தவம்- 1


நவ.01,2017. அர்மேனியா, உலகில், முதல் கிறிஸ்தவ நாடாக மாறியது என்பது பெரும்பாலான வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், எத்தியோப்பியாதான் முதலில் கிறிஸ்தவ நாடாக மாறியது என்றும் சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். ஏறத்தாழ கி.பி.100ம் ஆண்டு முதல் கி.பி.940ம் ஆண்டுவரை தற்போதைய எரிட்ரியா மற்றும் எத்தியோப்பியாவின் Tigray பகுதியை ஆட்சி செய்த Aksum அல்லது Axum அரச பரம்பரையைச் சேர்ந்த அரசர் Ezana காலத்திலே கிறிஸ்தவம் பரவியதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு, திருத்தூதர் பணிகள் நூல், பிரிவு 8, 26 முதல் 38 வரையுள்ள பகுதியை மேற்கோள் காட்டுகின்றனர். 

எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று, கடவுளை வணங்கிவிட்டுத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அவர் மூன்றாம் பாலினத்தவர்; அவர் எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர். அவர் தமது தேரில் அமர்ந்து எசாயாவின் இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் தூய ஆவியார், இயேசுவின் திருத்தூதர்  பிலிப்பிடம், “நீ அந்தத் தேரை நெருங்கிச் சென்று அதனோடு கூடவே போ” என்றார். பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக் கேட்டு, “நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?” என்று கேட்டார். அதற்கு அவர், “யாராவது விளக்கிக் காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?” என்று கூறித் தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார். “அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும், உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர்தம் வாயைத் திறவாதிருந்தார். தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை. அவருடைய தலைமுறையைப் பற்றி எடுத்துரைப்பவன் யார்? ஏனெனில் அவருடைய உயிர்தான் எடுக்கப்பட்டுவிட்டதே!” என்ற மறைநூல் பகுதியை அவர் வாசித்துக்கொண்டிருந்தார். அவர் பிலிப்பிடம், “இறைவாக்கினர் யாரைக் குறித்து இதைக் கூறுகிறார்? தம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தா? தயவுசெய்து கூறுவீரா?” என்று கேட்டார். அப்போது பிலிப்பு, இந்த மறைநூல் பகுதியிலிருந்து தொடங்கி, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவருக்கு அறிவித்தார். அவர்கள் போய்க் கொண்டிருந்தபோது வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடத்துக்கு வந்தார்கள். அப்போது அவர், “இதோ, தண்ணீர் உள்ளதே, நான் திருமுழுக்குப் பெற ஏதாவது தடை உண்டா?” என்று கேட்டார். ‘அதற்குப் பிலிப்பு, “நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடையில்லை”என்றார். உடனே அவர், “இயேசு கிறிஸ்து இறைமகன் என்று நம்புகிறேன்”என்றார்.’உடனே அமைச்சர் தேரை நிறுத்தக் கூறினார். பிலிப்பு, அமைச்சர் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். இதற்குப் பின் அந்த அரச அலுவலர் தன் நாடு திரும்பி கிறிஸ்தவத்தைப் பரப்பினார் என்று சொல்லப்படுகின்றது. .

கி.பி.முதல் நூற்றாண்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வு குறித்து சில வல்லுனர்கள் இவ்வாறு சொல்கின்றனர். எத்தியோப்பியன் என்பது, ஆப்ரிக்க கறுப்பினத்தவர்க்குப் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும். இந்த அரச அலுவலர், எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர் என்று திருத்தூதர் பணிகள் நூலில் சொல்லப்பட்டுள்ளது. உண்மையில், அரசி கந்தகி, Nubiaவுக்கு அருகில், அதாவது தற்போதைய சூடான் நாட்டில் ஆட்சி செய்தார். மேலும், கந்தகி என்பது, ஒரு குறிப்பிட்ட ஆளைக் குறிக்காமல், அரசி என்பதைக் குறிக்கும். எத்தியோப்பியாவில் கிறிஸ்தவம் பரவுவதற்கு முன்னரே யூதமதம் பரவியிருந்தது என்றும், எத்தியோப்பிய ஆர்த்தடாக்ஸ் விவிலியத்தில் எண்ணற்ற யூத அரமேய சொற்கள் உள்ளன என்றும் அறிஞர்கள் சொல்கின்றனர்.

கத்தோலிக்கத் திருஅவையின் வரலாற்று ஆசிரியர் Nicephorus அவர்களின் கூற்றுப்படி, திருத்தூதர் புனித மத்தேயு, யூதேயாவில் நற்செய்தியை போதித்தபின், தற்போதைய எத்தியோப்பியாவில் நற்செய்தியை அறிவித்தார் என்று அறிகிறோம். திருஅவை வரலாற்று ஆசிரியர்கள் Socrates, Sozemius ஆகியோர் எழுதி வைத்துள்ளது போன்று, புகழ்பெற்ற தீர் நகர் (Tyre of  Rufinus)  ரூஃபினுஸ் அவர்கள் எழுதி வைத்துள்ள குறிப்புக்களின்படி, புனித ஃபுருமென்சியுஸ் (Frumentius) மற்றும் அவரின் தோழரால் எத்தியோப்பியாவில் கிறிஸ்தவம் பரவியது என்று அறிய வருகிறோம். இவர், தனது இளம் வயதில் உரோமைப் பேரரசர் கான்ஸ்ட்டடைன் அவர்களின் உறவினர் ஒருவரோடு எத்தியோப்பியா சென்று திரும்பிய வழியில் கப்பல் சேதம் அடைந்தது. அச்சமயத்தில்  உரோமையர்களுடன் போர் நடந்தது. எனவே கப்பலில் பயணம் செய்த அனைவரையும் எத்தியோப்பிய அரசரின் ஆட்கள் கொன்று போட்டனர். ஆனால் சிறுவர்களாக இருந்த ஃபுருமென்சியுஸ், அவரின் தோழர் எடிசியுஸ் ஆகிய இருவரும் எத்தியோப்பிய அரசர் Aksumடம் பிணையல் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்விருவரால் எத்தியோப்பியாவில் கிறிஸ்தவம் பரவியது என்று ரூஃபினுஸ் எழுதியுள்ளார்.

ஃபுருமென்சியுஸ், எத்தியோப்பியாவில் எவ்வாறு கிறிஸ்தவத்தைப் பரப்பினார் என்று அடுத்த வார இந்நிகழ்ச்சியில் கேட்போம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.