2017-11-01 16:03:00

புலம் பெயர்ந்தோர், மீண்டும் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப...


நவ.01,2017. லெபனான் நாட்டில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோர் அந்நாட்டில் தொடர்ந்து வாழ்வது, அந்நாட்டிற்கு பெரும் ஆபத்தாக மாறக்கூடும் என்று, மாறனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் பெக்காரா அல்-ரஹி அவர்கள் லெபனான் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பாலஸ்தீனா, சிரியா ஆகிய நாடுகளில் நிலவிய மோதல்கள் காரணமாக, அந்நாடுகளிலிருந்து லெபனான் நாட்டிற்கு புலம் பெயர்ந்தோர், மீண்டும் தங்கள் நாடுகளுக்குத் திரும்பும் வழிமுறைகளை அரசுகள் இணைந்து மேற்கொள்ளவேண்டிய அவசியம் உள்ளது என்று கர்தினால் அல்-ரஹி அவர்கள் தெரிவித்தார்.

40 இலட்சமாக இருந்த லெபனான் நாட்டு மக்கள் தொகை, புலம் பெயர்ந்தோரின் வருகையால் இன்று 60 இலட்சமாக உயர்ந்துள்ளது என்பதை தன் பேட்டியில் சுட்டிக்காட்டிய கர்தினால் அல்-ரஹி அவர்கள், இந்நிலை, லெபனான் நாட்டிற்கு பெரும் பாரமாக அமைந்துள்ளது என்று கூறினார்.

புலம் பெயர்ந்தோர் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கு உலக அரசுகள் உதவி செய்யவில்லையெனில், புலம் பெயர்ந்தோர் முகாம்கள், தீவிரவாதத்தை வளர்க்கும் விளைநிலமாக மாறும் ஆபத்து உள்ளது என்று கர்தினால் அல்-ரஹி அவர்கள் கவலை வெளியிட்டார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.