2017-11-03 14:52:00

அர்தியத்தீனே குகைக் கல்லறைகளில் திருத்தந்தை செபம்


நவ.03,2017. இத்தாலியின் நெத்தூனோவிலுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு வீரர்களின் கல்லறையில் திருப்பலி நிறைவேற்றியபின், வத்திக்கான் திரும்பிய வழியில், ஃபோஸ்ஸே அர்தியத்தீனே என்ற இடத்திலுள்ள குகைகளில், போரின் கொடூரத்தால் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக்கும் சென்று செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்கல்லறைப் பகுதியில் அமைதியாகச் செபித்த திருத்தந்தை, இறந்தவர்களின் நினைவாக வெள்ளை ரோஜா மலர்களையும் வைத்தார். 

ஆபிரகாமின் கடவுளே, ஈசாக்கின் கடவுளே, யாக்கோபின் கடவுளே, இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள ஒவ்வொருவரின் பெயர்களையும், முகங்களையும் நீர் அறிவீர், விடுதலை மற்றும் நீதிக்காகப் போராடியவர்களின் நினைவிடத்தில், எங்களின் தன்னலமும் புறக்கணிப்பும் அகல வேண்டுமெனச் செபிக்கின்றோம் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

இரண்டாம் உலகப்போரின்போது, நாத்சி இராணுவத்தின் 33 காவல்துறையினர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, 1944ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி நடத்தப்பட்ட படுகொலையில் 335 இத்தாலிய அப்பாவி பொதுமக்களும், சிறாரும் கொல்லப்பட்டனர். யூதர்களின் இந்தக் குடியிருப்புப் பகுதியில் நாத்சி படைகள் நடத்திய தாக்குதலில், ஐந்து ஐந்து பேராக முழந்தாளில் வைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். பின் இந்த உடல்களை, இந்தப் பகுதி குகைகளில் வீசி, யாரும் நுழையாதபடி முத்திரை குத்தின நாத்சி படைகள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.