2017-11-03 15:04:00

இந்து நாடாக அறிவிக்க வேண்டுமென்ற அழைப்புக்கு மறுப்பு


நவ.03,2017. இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மதத்தவரைவிட, அந்நாட்டில் வாழ்கின்ற இந்துக்கள் முன்னுரிமை பெற வேண்டுமென்று, இந்து தீவிரவாத அமைப்பு ஒன்று வலியுறுத்தி வருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார், இந்திய கத்தோலிக்க அதிகாரி ஒருவர்.

இந்தியா இந்து நாடாக மாற வேண்டுமென்று, Saamana (போராடு) என்ற மராத்தி மொழி தினத்தாளில் வெளியான ஆசிரியர் பகுதி பற்றி, யூக்கா செய்தியிடம் பேசிய, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் செயலர், ஆயர் தியோடர் மஸ்கரேனஸ் அவர்கள், இந்தக் கட்சி, இந்திய அரசியல் அமைப்பின் சமயச்சார்பற்ற தன்மையை புறக்கணிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்து தீவிரவாதக் குழுக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் சமய சுதந்திரத்திற்கு எதிராகப் போராடிவருவது குறித்து கருத்து தெரிவித்த ஆயர் மஸ்கரேனஸ் அவர்கள், இந்தியா சமயச் சார்பற்ற நாடு என்றும், இந்தியா ஏதோ ஒரு மதத்தைச் சார்ந்ததாக மாறுவதை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

பல்வேறு மதங்களிடையே சகிப்புத்தன்மையுடனும், நல்லிணக்கத்துடனும் எப்போதும் விளங்கும் இந்தியாவில், சிவசேனா போன்ற ஒரு சிறிய பிரிவு, ஒட்டுமொத்த நாட்டின் கருத்தாக அமைய முடியாது என்றும் கூறினார் ஆயர் மஸ்கரேனஸ்.

120 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் 80 விழுக்காட்டினர் இந்துக்கள். கிறிஸ்தவர்கள் 2.3 விழுக்காடு மட்டுமே.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.