2017-11-03 11:23:00

தீவிரவாதத் தாக்குதல்களால் வேதனை அடைந்துள்ள திருத்தந்தை


நவ.02,2017. கடந்த சில நாட்களாக, சோமாலியா மற்றும் ஆப்கானிஸ்தானிலும், இச்செவ்வாயன்று நியூ யார்க் நகரிலும் நிகழ்ந்துள்ள தீவிரவாதத் தாக்குதல்களால் தான் மிகவும் வேதனை அடைந்திருப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்தார்.

நவம்பர் 1, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்து புனிதர்கள் பெருவிழாவையொட்டி வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, இவ்வுரையின் இறுதியில், தீவிரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தோருக்காக செபிக்கும்படி அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

இறைவனின் பெயரை பயன்படுத்தி, மரணத்தை விதைக்கும் தீவிரவாதிகளின் உள்ளங்களில் இறைவன் மனமாற்றத்தை உருவாக்கவேண்டும் எனவும், இவ்வுலகை வெறுப்பிலிருந்தும், வன்முறையிலிருந்தும் இறைவன் காத்தருள வேண்டுமென்றும் செபிக்கும்படி திருத்தந்தை விண்ணப்பித்தார்.

மேலும், இவ்வியாழனன்று, நெத்தூனோ, ஃபோஸ்ஸே அர்தியத்தீனே, ஆகிய கல்லறைகளுக்குச் சென்று, போர்களில் இறந்தோருக்காக தான் செபிக்கவிருப்பதாகக் கூறிய திருத்தந்தை, போர்கள், இவ்வுலகில் மரணத்தையும், கல்லறைகளையும் மட்டுமே உருவாகியுள்ளன என்றும், இந்த அழிவுகளிலிருந்து மனிதகுலம் தனக்குத் தேவையான பாடங்களை இன்னும் கற்றுக்கொள்ளவில்லையென்றும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.