2017-11-03 14:45:00

போர் கொணரும் ஒரே கனி மரணம், திருத்தந்தை பிரான்சிஸ்


நவ.03,2017. இந்த உலகம் மற்றுமொரு போருக்குத் தயாரித்துவருவதுபோல் தெரியும் இக்காலத்தில், வன்முறைகளும், போரினால் ஏற்படும் அழிவுகளும் முடிவுக்கு கொண்டுவரப்படுமாறு இறைவனிடம் கெஞ்சி மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறந்தோர் நினைவு நாளில் கேட்டுக்கொண்டார்.

இறந்த அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளான நவம்பர் 2, இவ்வியாழன் பிற்பகலில், இத்தாலியிலுள்ள அமெரிக்க வீரர்களின் கல்லறையில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை, இன்றைய உலகம், பெரியதொரு போருக்குத் தயாரித்துவரும்வேளை, ஆண்டவரே, இந்த உலகில் இனிமேல் போரே வேண்டாம், ஒருபோதும் வேண்டாம் என்று செபிப்போம் என்றார்.

போரில் கனவுகள் சிதைக்கப்படுகின்றன, மனித வாழ்வு அழிக்கப்படுகின்றது, ஆக போரில் எல்லாமே இழக்கப்படுகின்றது, போரின் கனி மரணமே என்றுரைத்த திருத்தந்தை, திருஅவை இறந்த விசுவாசிகளுக்காகச் சிறப்பு செபங்களை அர்ப்பணிக்கும் இந்நாளில், இக்கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள இளையோருக்காக, சிறப்பாகச் செபிப்போம் என்று கூறினார்.

கல்லறைகளையும், மரணத்தையும் தவிர, வேறு எதையுமே போர்கள் கொணர்வதில்லை என்றும், மனித சமுதாயம் பாடங்களைக் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை மற்றும், பாடங்களைக் கற்றுக்கொள்ள விரும்பாததாகத் தெரிகின்றது என்றும் மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகருக்கு தெற்கே 66 கிலோமீட்டர் தூரத்தில், நெத்தூனோ எனும் கடற்கரை நகரத்தில், 77 ஏக்கர் நிலபரப்பில் அமைந்துள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு வீரர்களின் கல்லறையில், 7,860 வீரர்களின் கல்லறைகள் உள்ளன. இவற்றில் 16 பெண்கள், பெண்கள் இராணுவப் பிரிவில், செஞ்சிலுவை சங்கத்தில் அல்லது செவிலியர்களாகப் பணியாற்றியவர்கள். இரண்டாம் உலகப்போரின்போது, 1943ம் ஆண்டுக்கும், 1944ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், சிசிலித் தீவை மீட்பதற்காக நடைபெற்ற சண்டையில் இறந்தவர்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.