2017-11-04 14:29:00

கத்தோலிக்க பல்கலைக்கழகங்கள் புலம்பெயர்ந்தவர்க்கு பணியாற்ற..


நவ.04,2017. ஆராய்ச்சி, கற்பித்தல், சமூக நீதியை ஊக்குவித்தல் ஆகிய துறைகளில் கத்தோலிக்க பல்கலைக்கழகங்கள் ஆற்றிவரும் பணிகள், புலம்பெயர்ந்தவர் குறித்த திருஅவையின் நான்கு மைல்கற்களுடன் ஒத்திணங்கிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கத்தோலிக்க பல்கலைக்கழகங்களின் உலகளாவிய கூட்டமைப்பினர் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்ட ஏறக்குறைய 230 பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமை காலையில் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

“தாராளமயமாக்கப்பட்ட உலகில் புலம்பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர் : பல்கலைக்கழகங்களின் பொறுப்புகளும், பதில்களும்” என்ற தலைப்பில், இக்கூட்டமைப்பினர் கருத்தரங்கு நடத்தியுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, ஆராய்ச்சி, கற்பித்தல், சமூக நீதியை ஊக்குவித்தல் ஆகிய மூன்று கூறுகள் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். 

வரவேற்றல், பாதுகாத்தல், முன்னேற்றுதல், ஒருங்கிணைத்தல் ஆகிய நான்கு கூறுகளுடன் திருஅவை, இக்காலத்திய புலம்பெயர்ந்த மக்களுக்குப் பணியாற்றி வருகின்றது என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆராய்ச்சி துறையைப் பொருத்தவரை, கத்தோலிக்க பல்கலைக்கழகங்கள், அறிவியல் ஆய்வை, எப்போதும் இறையியலோடு இணைத்துச் செய்கின்றன என்றும், கட்டாயப் புலம்பெயர்வுகள் குறித்த காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் ஆய்வு செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை.

கற்பித்தலைப் பொருத்தவரை, பல்வேறு நிலைகளில் புலம்பெயரும் மக்கள் பற்றிய கல்வித் திட்டங்களை ஊக்குவிக்க வேண்டுமென்றும், சமூக நீதியை ஊக்குவித்தலைப்  பொருத்தவரை, பல்கலைக்கழகங்களுக்கு இதில் முக்கிய பொறுப்பு உள்ளதாகப் பார்க்கப்படுகின்றது என்றும் கூறியத் திருத்தந்தை, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவை, புலம்பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர் குறித்து பரிந்துரைத்துள்ள இருபது செயல்திட்டங்கள் பற்றியும் குறிப்பிட்டார். 

தொன்மைகால கிறிஸ்தவ மரபுகளைக் கொண்டிருக்கும் நாடுகளில் புலம்பெயர்ந்தவர் வரவேற்கப்படுவதைப் பாராட்டுவதாகவும், அதேநேரம், இந்நாடுகளில், இம்மக்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாட்டு உணர்வு மற்றும், இன உணர்வுகள் பற்றியும் கவலையுடன் குறிப்பிட்ட திருத்தந்தை, காலத்தின் அடையாளங்களாக, இம்மக்கள் குறித்த இறையியல் ஆய்வுகளை ஆழப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.  

புனித சார்லஸ் பொரோமேயோ விழாவாகிய இந்நாளில், அப்புனிதர், கத்தோலிக்க பல்கலைக்கழகங்களின் முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டாய் உள்ளார் எனவும், புலம்பெயர்ந்தவர் மற்றும் குடிபெயர்ந்தவர்களுக்கு, கத்தோலிக்க பல்கலைக்கழகங்கள் ஆற்றும் பணிகளை ஆண்டவர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று செபிப்பதாகவும், தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாமெனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.