2017-11-04 14:21:00

பொதுக்காலம் 31ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


ஞாயிறு திருப்பலி முடிந்து, மக்கள் கலைந்து சென்றுகொண்டிருந்தனர். திருப்பலி நிறைவேற்றிய அருள்பணியாளர், கோவிலுக்கு முன்புறம் மக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண்மணி, அவரிடம், "சாமி, நீங்க கொடுத்த பிரசங்கம் பிரமாதமாக இருந்தது. நீங்க சொன்ன ஒவ்வொரு கருத்தும், எனக்குத் தெரிந்த யாராவது ஒருத்தருக்கு பொருத்தமானக் கருத்தாக இருந்தது" என்று கூறினார்.

அருள்பணி அந்தனி டி மெல்லோ அவர்கள் எழுதிய 'Taking Flight' என்ற நூலின் முகவுரையில் கூறப்பட்டுள்ள ஒரு குறுங்கதை இது. மறையுரையில், அருள்பணியாளர், ஒவ்வொரு கருத்தையும் முன்வைத்தபோது, 'இது இவருக்குப் பொருந்தும், இது அவருக்குப் பொருந்தும்' என்று, அப்பெண்ணின் மனம், பலரை எண்ணிப் பார்த்ததேயொழிய, அந்த மறையுரையின் வழியே, அப்பெண், தனக்கென எந்தப் பாடமும் பயின்றதுபோல் தோன்றவில்லை.

அந்தப் பெண்ணின் நிலையில், நானும், என்னைப்போன்ற அருள்பணியாளர்கள் பலரும் பலமுறை இருந்திருக்கிறோம். ஒவ்வொரு ஞாயிறன்றும் தரப்படும் விவிலிய வாசகங்களை நான் வாசிக்கும்போது, மற்றவர்களுக்கு, மறையுரையில் என்ன சொல்லலாம் என்பதிலேயே என் சிந்தனைகள் அதிகம் இருக்கும். அவ்வாசகங்களில் சொல்லப்படும் இறை வார்த்தைகள் என் வாழ்க்கையில் என்னென்ன அர்த்தங்களை, சவால்களைத் தருகின்றன என்று நான் அதிகம் யோசிப்பதில்லை.

மறையுரையாற்றும்போது, ஆலயத்தில், எனக்கு முன் அமர்ந்திருக்கும் மக்களைவிட நான் கொஞ்சம் உயர்ந்தவன் என்ற எண்ணம் எனக்குள் தலைதூக்கும். இத்தகைய எண்ணம், எனக்குள் மட்டுமல்ல; பல அருள்பணியாளர்களின் உள்ளங்களிலும் உதித்திருக்கும் என்பது என் கணிப்பு. ஒரு சில வேளைகளில், ஆலயத்தை, ஒரு நீதிமன்றமாக மாற்றி, மறையுரை வழங்கும் அருள்பணியாளர் நீதிபதியாக மாறி, மக்கள் என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்று, தீர்ப்புக்கள் தருவதுபோல் ஒலித்த மறையுரைகளை நான் வழங்கியிருக்கிறேன். கேட்டுமிருக்கிறேன்.

இன்று... ஒரு பெரும் மாற்றம். இன்றும், இந்த ஆலயம், ஒரு நீதி மன்றமாகத் தெரிகிறது. ஆனால், இன்று, இங்கு, நான் நீதிபதி அல்ல. மாறாக, நானும், என்னையொத்த அருள்பணியாளர்களும் இறைவன் என்ற நீதிபதிக்கு முன் நிற்கிறோம்... அதிலும், குற்றவாளிக் கூண்டில் எங்களை நிறுத்தி வைத்திருப்பதைப் போன்ற ஓர் உணர்வு, எனக்குள் இன்று அதிகம் எழுகிறது. இப்படி ஒரு காட்சி என் மனதில் எழுவதற்குக் காரணம்... இன்றைய ஞாயிறு வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும், யூத சமுதாயத்தின் குருக்களை, மறைநூல் அறிஞரை, பரிசேயரைக் கண்டித்து, கண்டனம் செய்து சொல்லப்பட்டுள்ள வாசகங்கள். இடியாய், மின்னலாய், நெருப்புக் கணைகளாய் உள்ளத்தை ஊடுருவித் தாக்கும் வார்த்தைகள், இவ்விரு வாசகங்களிலும் உள்ளன. முதல் வாசகத்தில், கடவுளே இந்த வார்த்தைகளைச் சொல்வதாகவும், நற்செய்தியில், இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்வதாகவும் இருப்பதால், இவ்வார்த்தைகளின் வெப்பமும், தாக்கமும் கூடியுள்ளன.

இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்தும், நற்செய்தி, மத்தேயு 23ம் பிரிவிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன. மத்தேயு நற்செய்தியின் 23ம் பிரிவை வாசிக்கும் ஒவ்வோர் அருள்பணியாளருக்கும் ஏகப்பட்ட அதிர்ச்சிகள் அங்கே காத்திருக்கும். அந்த அதிர்ச்சிகளிலிருந்து தப்பித்துக்கொள்ள, அருள்பணியாளர்கள், மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க முடியும். இயேசு, இந்த கடினமான வார்த்தைகளை அவர் காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞருக்கும், பரிசேயருக்கும் சொன்னார், தங்களுக்கு அல்ல என்று கூறி, இக்காலத்து அருள்பணியாளர்கள் தப்பித்துக் கொள்ளமுடியும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, அருள்பணியாளர்கள், ஆயர்கள், துறவியர் ஆகியோருக்கு எதிராக சொல்லப்பட்டுவரும் பல குற்றச்சாட்டுகள், நம் மத்தியில் ஒரு முக்கியத் தேடலை ஆரம்பித்து வைத்துள்ளன. எனவே, இங்கு சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள், யூத குருக்களுக்கு, அல்லது பரிசேயர்களுக்கு அல்லது நமக்குத் தெரிந்த அவருக்கு, இவருக்கு என்றெல்லாம் கூறி தப்பிக்காமல் சிந்திப்பது பயனளிக்கும். அதுவும், இந்த வாசகங்களை இன்று, கோவிலில், ஞாயிறுத் திருப்பலி நேரத்தில் வாசிப்பது, ஒரு பெரும் சவால். இறைமக்கள் முன், அருள்பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பயனுள்ள ஓர் ஆன்ம ஆய்வாக இதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

நீதி மன்றம் ஆரம்பமாகிவிட்டது. குற்றவாளிக் கூண்டில் நிற்கும் எனக்கும், என் உடன் அருள்பணியாளர்களுக்கும் எதிராக, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கூறப்பட்டுள்ள அனைத்து குற்றங்களையும் விசாரித்து முடிவு சொல்ல பல நாட்கள் ஆகலாம். எனவே, இரண்டே இரண்டு குறைகளை மட்டும் இன்று எடுத்துக்கொள்வோம். இவ்விரண்டையும் இயேசு இன்றைய நற்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயேசு குறிப்பிடும் முதல் குறை... இவர்கள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று; பிறருக்குப் போதிப்பார்கள், ஆனால், தங்கள் வாழ்வில் கடைபிடிக்க மாட்டார்கள் என்பது. இரண்டாவது குறை... தங்களது புகழை வெளிச்சம்போட்டுக் காட்டும் இவர்கள், பிறரிடம் மரியாதையைக் கேட்டுப் பெறுவார்கள் என்பது.

சொல்வார்கள் ஆனால் செய்யமாட்டார்கள் என்ற முதல் குறையை ஒரு கற்பனை காட்சியுடன் சிந்தித்துப் பார்ப்போம். தந்தையொருவர், தன் 15 வயது மகனிடம் கண்டிப்பான குரலில் பேசிக் கொண்டிருக்கிறார். புகை பிடிப்பதால் வரும் ஆபத்துக்களை விளக்கிக் கொண்டிருக்கிறார். மகனும், தந்தை சொல்வதைக் கேட்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறான். ஆனால், முடியவில்லை. அவன் கவனம் எல்லாம் தந்தையின் கையில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட் மீதே இருக்கிறது. ஆம், புகைப்பதன் ஆபத்துக்களை விளக்கிக் கொண்டிருக்கும் தந்தை, நிமிடத்திற்கொரு முறை, சிகரெட்டைப் புகைத்துக் கொண்டிருக்கிறார். அந்த இளையவன், தந்தை சொல்வதைக் கேட்பானா? அல்லது, அவர் விட்டுக் கொண்டிருக்கும் புகையை இரசிப்பானா?

அருள்பணியாளர்கள் வாழ்வில், சொல்லும், செயலும் முரண்பட்டிருக்கும் சூழலில், மக்கள் எவ்விதம் நடந்துகொள்ள வேண்டும் என்று, இயேசு இன்றைய நற்செய்தியில் இவ்வாறு அறிவுரை தந்துள்ளார்:

மத்தேயு நற்செய்தி 23: 3

மறைநூல் அறிஞரும் பரிசேயரும் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்.

வாழ்ந்துகாட்டும் துணிவின்றி, வார்த்தைகளால் விளையாடும் தலைவர்களிடமிருந்து மக்கள் தங்களை எப்படி காத்துக்கொள்ள வேண்டும் என்று இயேசு இந்த அறிவுரையைத் தருகிறார். அதே நேரம், குருக்கள், மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோருக்கு, இயேசு, மறைமுகமாகத் தரும் சாட்டையடி இது.

இந்தச் சாட்டையடியையும் புரிந்துகொள்ள மறுத்து, மக்கள் தங்களுக்குக் கீழ்ப்படியவேண்டும் என்று இயேசு சொன்னார் என்பதை மட்டும் சிந்தித்து, மதத்தலைவர்கள் பெருமைப்பட்டிருக்க வேண்டும். இவர்கள் இவ்வாறு தவறாகச் சிந்திப்பதற்கு, அவர்கள் மனதை ஆக்கிரமித்திருக்கும் தற்பெருமையே காரணம். இவர்களிடம் காணப்படும் இந்த வீண் பெருமையை இயேசு விவரிக்கும் வரிகள் இதோ:

மத்தேயு நற்செய்தி 23: 5-7

தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; ... விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.

குருக்களும், மதத்தலைவர்களும் மரியாதைக்குரியவர்கள்தாம். ஆனால், அந்த மரியாதை, அவர்கள் வாழும் முறையைப் பார்த்து, மக்கள் தாங்களாகவே மனமுவந்து தரும் மரியாதையாக இருக்கவேண்டும். செல்லும் இடங்களில் எல்லாம், நல்லவர்களை, புகழ் தேடி வருவது உண்மைதான். ஆனால், செல்லுமிடங்களில் எல்லாம், புகழைத் தேடிச் செல்பவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். இயேசு இவர்களைத்தான் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

தற்பெருமை என்ற போதையில் மயங்கி, தங்களையே மறந்து வாழும் குருக்களை எண்ணும்போது, கிரேக்கப் புராணத்தில் சொல்லப்படும் Narcissus நினைவுக்கு வருகிறான். உலகில் தன்னைப் போல் அழகானவன் யாரும் இல்லை என்று எண்ணி, தன்னைத் தானே இரசித்து வந்தவன் Narcissus. அவன் வாழ்ந்த காலத்தில் முகம் பார்க்கும் கண்ணாடிகள் இல்லாததால், நீர் நிலையில் தெரிந்த தன் பிம்பத்தை இரசித்தபடி, பலநாட்கள் அமர்ந்திருந்தான், அந்த இளைஞன். தான் காண்பது வெறும் பிம்பம் என்பதை அவன் ஏற்க மறுத்ததால், உண்ணவும், உறங்கவும் மறுத்து, அந்த பிம்பத்தை பார்த்தவண்ணம் அமர்ந்து, அங்கேயே உயிர் துறந்தான் Narcissus.

Narcissus என்ற இந்த கிரேக்கப் பெயரின் மூல வார்த்தையான Narke என்பதன் பொருள், 'தூக்கம்' அல்லது 'மரத்துப் போதல்'. தற்பெருமையில் ஊறி, மயக்கத்தில், தூக்கத்தில் உள்ளவர்களை, narcissism என்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்கிறோம். அத்தகைய நோயால் பாதிக்கப்பட்ட மதத்தலைவர்களை இயேசு இன்றைய நற்செய்தியில் படம்பிடித்துக் காட்டுகிறார்.

இறைவாக்கினர் மலாக்கி நூல், நற்செய்தி ஆகிய இரு வாசகங்களில் குருக்களுக்கு எதிராக ஒலித்த கண்டனக் குரலுக்கு ஒரு மாற்றாக, இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார் இறைபணியாளர்களின் மேன்மையை எடுத்துக் கூறுகிறார்.

தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 2: 6-10 (7-9)

கிறிஸ்துவின் திருத்தூதர்கள் என்னும் முறையில் நாங்கள் உங்களிடம் மிகுதியாக எதிர்பார்த்திருக்க முடியும். ஆனால் மனிதர் தரும் பெருமையை உங்களிடமிருந்தோ, மற்றவர்களிடமிருந்தோ நாங்கள் தேடவில்லை. மாறாக, நாங்கள் உங்களிடையே இருந்தபொழுது, தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதுபோல், கனிவுடன் நடந்து கொண்டோம்.... நம்பிக்கை கொண்டுள்ள உங்கள் முன்பாக நாங்கள் மிகவும் தூய்மையோடும் நேர்மையோடும் குற்றமின்றியும் ஒழுகினோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, கடவுளும் சாட்சி!

சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்ற இரட்டை வேடம் இல்லாமல், நான் போதிப்பதை என் வாழ்வில் வாழ்ந்து காட்டும் மன உறுதியை இறைவன் எனக்குத் தர வேண்டும் என்று எனக்காக மன்றாடுங்கள். அதேபோல், செல்லும் இடங்களில் எல்லாம் முதன்மை இடங்களை, பெருமைகளைத் தேடாமல், பணியாளனாக மாறும் பணிவை இறைவன் எனக்குத் தரவேண்டும் என்று எனக்காக மன்றாடுங்கள். உலகில் வாழும் அனைத்து இறை பணியாளர்களுமே புனித பவுல் அடியாரின் கூற்றுக்களை தங்கள் வாழ்வில் ஓரளவாகிலும் கடைபிடிக்க, அனைத்துத் திருப்பணியாளர்களுக்காகவும் மன்றாடும்படி உங்களை வேண்டுகிறேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.