2017-11-06 16:02:00

அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது, வளர்ச்சியை பாதிக்கும்


நவ.06,2017. அதிகாரத்திலிருப்போர் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும்போது, அது அடக்குமுறைக்கு வழிவகுத்து, மக்களின் வளர்ச்சியைப் பாதிக்கின்றது என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயர் குறித்து இயேசு கடிந்துகொன்ட வார்த்தைகள், எக்காலத்திலும் கிறிஸ்தவர்களுக்கு சரியான வழியைக் காட்டுவதாக உள்ளன என்றார்.

மறைநூல் அறிஞரும், பரிசேயரும், பேசுகிறார்கள், ஆனால் செய்வதில்லை என இயேசு கூறுவதும், மக்கள் மீது சுமையை சுமத்திவிட்டு தங்கள் விரலால் கூட அதனை அவர்கள் தூக்குவதில்லை என குற்றஞ்சாட்டுவதும், அதிகாரத்தை அவர்கள் தவறாகப் பயன்படுத்துவதைக் குறிக்கின்றது என்று கூறியத் திருத்தந்தை, அதிகாரம் என்பது நற்செயல்களின் எடுத்துக்காட்டுக்களால் செயல்படுத்தப்பட வேண்டும் என்றார்.

அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படும்போது, அது அடக்குமுறைக்கும், நம்பிக்கையின்மைக்கும், விரோத மனப்பான்மைக்கும் இட்டுச் செல்வதுடன், ஊழலுக்கும் வழி வகுக்கின்றது என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இறைவனால் நமக்கு வழங்கப்பட்டுள்ள நல்லவற்றை, பிறர் சேவைக்கென பயன்படுத்தவேண்டுமேயொழிய, பெயரையும் புகழையும் தேடி ஓட பயன்படுத்தக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.