2017-11-07 16:17:00

உலகத் தலைவர்கள் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை சந்திப்பு


நவ.07,2017. இத்திங்கள் மாலை, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் முன்னாள் ஐ.நா. பொதுச் செயலரையும் அவருடன் வந்த உலகத் தலைவர்கள் அமைப்பின் 4 பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

‘The Elders’ என்ற பெயரில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தென் ஆப்ரிக்க முன்னாள் அரசுத் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களால் துவக்கப்பட்ட இயக்கத்தின் 4 பிரதிநிதிகளுடனும், முன்னாள் ஐ.நா. பொதுச்செயலர் கோஃபி அன்னன் அவர்களுடனும்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நடத்திய இந்த கலந்துரையாடலில், அமைதி, குடியேற்றம், தட்ப வெப்ப நிலை மாற்றம், ஆண் பெண் சரி நிகர் நிலை போன்றவை குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குரலற்றோரின் குரலாகச் செயல்பட்டுவரும், மற்றும், மோதல்களைத் தவிர்ப்பதற்கு உழைத்துவரும் திருத்தந்தையின் முயற்சிகளை நேரில் சந்தித்துப் பாராட்டுவதும் தங்கள் நோக்கமாக இருந்தது என திருத்தந்தையை சந்தித்தபின் இத்தலைவர்கள் தெரிவித்தனர்.

உலகின் பொதுவானப் பிரச்சனைகள், பொது மதிப்பீடுகள், பொது ஒழுக்க ரீதி நோக்கங்கள் போன்றவை குறித்து விவாதித்தபோது, திருத்தந்தை மிகவும் ஆர்வம் காட்டியதை காணமுடிந்தது என்றார், இக்குழுவில் திருத்தந்தையை சந்தித்த அயர்லாந்தின் முன்னாள் அரசுத் தலைவர், மேரி இராபின்சன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.