2017-11-07 16:24:00

எகிப்தின் இஸ்லாமியத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு


நவ.07,2017. எகிப்தின் சுன்னி இஸ்லாம் மதத் தலைவர் அஹ்மது முகமது அல் தாயிப் அவர்கள், இச்செவ்வாய்க் காலையில், திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

எகிப்தின் கெய்ரோ பல்கலைக் கழகத்தின் தலைவரான அஹ்மது முகமது அல் தாயிப் அவர்கள்,  ஏற்கனவே, திருத்தந்தையை, 2016ம் ஆண்டு, திருப்பீடத்திலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கெய்ரோவிலும், சந்தித்து உரையாடியுள்ளார்.

மேலும், இச்செவ்வாயன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி, 'நம் பக்கத்தில், நம்மோடு நடக்கும் நாசரேத்தூர் இயேசு, தன் சொற்கள், மற்றும், தான் ஆற்றும் அடையாளங்கள் வழியாக, தந்தையாம் இறைவனின் அன்பெனும் உயரிய மறையுண்மையை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்' என்பதாக இருந்தது.

இதற்கிடையே, திருப்பீட பொது நிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு அவையின் ஒரு பிரிவாக இயங்கிவரும் திருப்பீட வாழ்வுத் துறையின் நேரடிச் செயலராக,  இத்தாலியின் பேராசிரியர் கபிரியெல்லா கம்பினோ அவர்களையும், திருப்பீடப் பொதுநிலையினர் துறையின்  நேரடித் துணைச் செயலராக, இத்தாலியின் முனைவர் லிண்டா கிசோனி என்பவரையும் நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.