சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறைக்கல்வி, மூவேளை உரை

மறைக்கல்வியுரை : சதையைத் தொட்டு, விசுவாசத்தை புதுப்பிக்க...

புதன் மறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் - ANSA

08/11/2017 14:47

நவ.,08,2017. கடந்த பல வாரங்களாக, கிறிஸ்தவ நம்பிக்கை குறித்த கருத்துக்களை, புதன் மறைக்கல்வி உரைகளில், ஒரு தொடராக வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரத்திலிருந்து, திருப்பலி குறித்த ஒரு புதிய மறைக்கல்வி தொடரைத் துவக்கியுள்ளார். “நானே வாழ்வு தரும் உணவு. என் சதையையே உங்களுக்கு உணவாகத் தருகிறேன், அதை உண்பவர் என்றுமே வாழ்வார்”, என இயேசு கூறிய பகுதியான,  யோவான் நற்செய்தி பிரிவு 6, 47 முதல் 51 வரையுள்ள இறைவாக்கியங்கள் முதலில் வாசிக்கப்பட, திருப்பலி குறித்த மறைக்கல்வி தொடருக்கு ஒரு முன்னுரையாக, இப்புதன் மறைக்கல்வி உரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே, திருப்பலி குறித்த ஒரு புதிய மறைக்கல்வித் தொடரை இன்று நாம் துவக்குகின்றோம். திருப்பலி என்பது திருஅவையின் இதயம், மற்றும் திருஅவை வாழ்வின் ஆதாரம். திருப்பலியின் புனிதத்தைக் காப்பதற்கென, எத்தனையோ பேர் மறைசாட்சிகளாக உயிர் துறந்துள்ளனர். இயேசுவின் உடல் மற்றும் இரத்தத்தில் நாம் பங்குபெறுவதன் வழியாக, நாம் மரணத்திலிருந்து வாழ்வுக்கு கடந்து செல்கிறோம் என்ற இயேசுவின் வாக்குறுதியை உறுதி செய்வதாக, இந்த மறைசாட்சிகளின் சாட்சிய வாழ்வு உள்ளது. ஒவ்வொரு திருப்பலியின்போதும், இயேசுவின் சிலுவைப் பலியோடு நம் வாழ்வும் காணிக்கையாக இணைக்கப்படுகின்றது. இவ்வாறு, தந்தையாம் இறைவனுக்கு ஏற்புடையதாக,  நம் நன்றி, மற்றும், புகழ்பாடலின் காணிக்கையாக இயேசுவில் மாறும் நம் வாழ்வு, இவ்வுலகின் மீட்புக்காக வழங்கப்படுகிறது. திருப்பலியை, விசுவாசிகள், முழுமையான வகையில் புரிந்துகொள்ளவும், அதில், சிறந்த முறையில் பங்குகொள்ளவும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் அழைப்பு விடுத்த திருவழிபாட்டு புதுப்பித்தல்கள், உதவுவதாக இருந்தன. திருப்பலியில், மெய்யாகவே பிரசன்னமாக இருக்கும் இயேசு கிறிஸ்து, புனித தோமாவைப்போல், நாமும், அவரின் சதையைத் தொடவும், அதன் வழி நம் விசுவாசத்தை புதுப்பிக்கவும் உதவுகிறார். அடுத்துவரும் வாரங்களின் புதன் மறைக்கல்வி உரைகளில், நாம், இந்த உன்னத கொடை குறித்த உண்மையுணர்ந்து போற்றுவதில் மேலும் வளர்வோமாக. நம் வாழ்விற்கு பாதையையும் உன்னத அர்த்தத்தையும் வழங்கும் திருப்பலியின் ஆன்மீக வளத்தில் முழுமையான விதத்தில் பங்கு பெறுவது குறித்தும், வரும் வாரங்களில், சிந்திப்போம்.

இவ்வாறு, தன் புதன் பொது மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

08/11/2017 14:47