2017-11-08 15:32:00

அமெரிக்க ஆயர்கள் : துப்பாக்கி சட்டங்கள் மீது விவாதம் தேவை


நவ.08,2017. துப்பாக்கிகளின் பயன்பாடு குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிலவும் சட்டங்கள் பற்றியும், துப்பாக்கி பயன்பாட்டால் நிகழும் வன்முறைகள் குறித்தும் பொதுமக்களிடையே பொருளுள்ள கருத்துப் பரிமாற்றம் நடைபெறவேண்டும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்காவின் Las Vegas மற்றும் Sutherland Springs ஆகிய இடங்களில் துப்பாக்கி கொண்டு நடத்தப்பட்டுள்ள உயிர்பலிகளைத் தொடர்ந்து, இந்த கருத்துப் பரிமாற்றத்திற்கு ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

துப்பாக்கி வைத்திருத்தல், பயன்படுத்துதல் தொடர்பான சட்டங்களை தலைவர்கள் மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று, அமெரிக்க ஆயர்கள், கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்துள்ளனர் என்று, ஆயர் பேரவையின் உள்நாட்டு நீதி மற்றும் மனித முன்னேற்ற பணிக்குழுவின் தலைவர், புளோரிடா ஆயர் Frank Dewane அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த மாதம் அக்டோபர் முதல் தேதி, Las Vegas நகரில், ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 22,000த்திற்கும் அதிகமான மக்கள் மீது Stephen Paddock என்பவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில், 59 பேர் கொல்லப்பட்டனர், 500க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

நவம்பர் 5ம் தேதி, கடந்த ஞாயிறன்று, Sutherland Springs எனுமிடத்தில் முதல் பாப்டிஸ்ட் ஆலயத்தில், ஞாயிறு வழிபாட்டிற்கு கூடியிருந்தோர் மீது, Devin Kelley என்பவர்  மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில், 26 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமுற்றனர்.

தற்காப்பு கருதி, ஒருவர் துப்பாக்கி வைத்திருக்கலாம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, பெரும் வன்முறைகள் நிகழும் வாய்ப்பக்கள் உள்ளச் சூழலில், இந்தச் சட்டம் குறித்த பொருள் நிறைந்த விவாதங்கள் தேவை என்று அமெரிக்க ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.