2017-11-08 15:23:00

டெக்ஸாஸ் வன்முறைக்கு திருத்தந்தையின் இரங்கல் தந்தி


நவ.08,2017. மதியற்ற வன்முறையின் காரணமாக, Sutherland Springs என்ற இடத்தில் உள்ள முதல் பாப்டிஸ்ட் ஆலயத்தில் நடைபெற்ற உயிரிழப்புகள் குறித்து, ஆழ்ந்த வேதனையடைந்திருப்பதாக, திருத்தந்தை பிரான்ஸ் அவர்கள், தந்திச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்ஸாஸ் மாநிலத்தின் Sutherland Springs எனுமிடத்தில், நவம்பர் 5, ஞாயிறன்று, ஆலயத்தில், காலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான 26 பேர், மற்றும் காயமுற்ற 20 பேர், மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, திருத்தந்தையின் பெயரால், ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவிக்கும் தந்தியொன்றை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், நவம்பர் 7, இச்செவ்வாயன்று அனுப்பியுள்ளார்.

முதல் பாப்டிஸ்ட் சபையினருக்கு தன் அனுதாபங்களைத் தெரிவிக்குமாறு கூறும் திருத்தந்தையின் தந்திச் செய்தி, டெக்ஸாஸ் மாநிலத்தின் சான் அந்தோனியோ உயர் மறைமாவட்டத்தின் பேராயர், Gustavo Garcia-Siller அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஞாயிறன்று நடைபெற்ற இந்தக் கோர நிகழ்வைத் தொடர்ந்து, பேராயர் Garcia-Siller அவர்கள் வெளியிட்ட ஒரு செய்தியில், இறைவனின் இல்லத்தில் வழிபடக் கூடியிருந்த, குழந்தைகள், வயதானோர் அனைவர்மீதும் நடத்தப்பட்ட இந்த வன்முறை, நம்மை ஆழ்ந்த அதிர்ச்சியில் நிறைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.