2017-11-08 15:00:00

பாசமுள்ளப் பார்வையில்....., : குழந்தைகளுக்குள் பொறாமையில்லை


பள்ளிக்குச் சென்றிருந்த 10 வயது மாலாவுக்கு அன்று பள்ளியில் இருப்பு கொள்ளவில்லை. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அம்மாவுடன், அப்பாவும் பாட்டியும்  இருப்பதால், தன்னை கவனிக்க யாரும் இல்லையென, இன்றும் பள்ளிக்கு அனுப்பிவிட்டார்கள். இல்லையென்றால், தன் அம்மாவின் இரண்டாவது பிரசவத்திற்கு, மாலாவும், கட்டாயம் பக்கத்தில்தான் இருந்திருப்பாள். மாலையில் பள்ளி விட்டதும் ஒரே ஓட்டமாக மருத்துவமனைக்குச் சென்ற மாலா, நேராக அம்மாவின் படுக்கையருகே சென்றுப் பார்த்தபோது, புதிதாகப் பிறந்திருந்த பெண் குழந்தை ஒன்று அம்மாவுக்கருகே தூங்கிக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்க்காமல், ஒவ்வொருவரும் மாலாவின் முகத்தையேப் பார்த்தனர். தனக்குப் போட்டியாக இன்னொரு குழந்தை வந்துவிட்டதை மாலா எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறாள் என அனைவரும் யோசித்துக் கொண்டிருக்க, முகத்தில் பெரு மகிழ்ச்சியை வெளியிட்ட மாலா, 'அம்மா, நான் தங்கச்சி பாப்பாவை தூக்கலாமா?' என்று கேட்டாள். ‘இப்போது வேண்டாம், வீட்டிற்கு போனப் பிறகு நீயே பக்கத்தில் வைத்துப் பார்த்துக்கொள்’, என்று கூறிய தாய், தன் மாமியாரை அர்த்தத்துடன் பார்த்தார். 'இன்னொரு பொம்பளப் பிள்ளையைப் பெற்றுவிட்டாயா!, இப்போதே உன் மூத்த மகளுக்கு பொறாமை தலை தூக்கும் பாரு' என தன் மாமியார் கூறியதும், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததும், இப்போது அத்தாயின் நினைவில் வந்தது. 'அத்தை, என்ன இருந்தாலும், பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே தாய்மை உணர்வு பிறந்துவிடுகிறது. எந்த ஆண் பிள்ளையாவது, ‘பார்பி’ பொம்மையை வைத்து விளையாடுவதைப் பார்த்திருக்கிறீர்களா, பெண் பிள்ளைகளுக்குத்தான் அது பிடிக்கும். அப்பொம்மைகளைக் குளிப்பாட்டி, சோறூட்டி, உடை உடுத்தி வைப்பதை எந்த ஆண் குழந்தையாவது செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அதனால்தான் சொல்கிறேன், தனக்குப் பின் பிறக்கும் தம்பி தங்கைகளை, பெண் பிள்ளைகள், போட்டியாக ஒரு நாளும் நினைப்பதில்லை. என் மகளும் அப்படி நினைக்க மாட்டாள்' என அந்தத் தாய், தன் மாமியாரிடம் கூறியதை, நிரூபிப்பதாக மாலாவின் செயல்கள் இருந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.