சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ உரைகள்

அணு ஆயுதங்கள் உருவாக்கும் பொய்யான பாதுகாப்பு

அணு ஆயுத ஒழிப்பு பன்னாட்டுக் கருத்தரங்கின் பிரதிநிதிகளைச் சந்தித்த திருத்தந்தை

10/11/2017 15:21

நவ.10,2017. மக்களை அழிக்கும் ஆயுதங்கள், குறிப்பாக, அணு ஆயுதங்கள், பொய்யான ஒரு பாதுகாப்பை இவ்வுலகில் உருவாக்கி வருகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டு பிரதிநிதிகளிடம் கூறினார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, "அணு ஆயுதங்களிலிருந்து விடுதலை பெற்ற உலகை உருவாக்கும் கூறுகள்" என்ற தலைப்பில், வத்திக்கானில் ஏற்பாடு செய்திருந்த ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்ட 350க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளைச் சந்தித்த திருத்தந்தை, உலக சமுதாயத்தின் பொதுநலனை மனதில் கொண்டு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஆயுதங்களுக்கு, குறிப்பாக, அணு ஆயுதங்களுக்கு பெருமளவு நிதியை செலவிடுவதால், வறுமை ஒழிப்பு, அமைதி வளர்ப்பு, கல்வி, உடல்நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற ஏனைய முக்கியமான தேவைகளை, அரசுகள் புறந்தள்ளுகின்றன என்று திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

உலகில் அணு ஆயுதங்கள் குவிந்துள்ள வேளையில், தவறுதலாக, ஓரிடத்தில், அவை வெடிக்க நேர்ந்தால், அதன் விளைவுகளை எண்ணிப்பார்க்கவும் நம் மனங்கள் அஞ்சுகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கவலை வெளியிட்டார்.

பன்னாட்டு உறவுகள், அணு ஆயுத சக்திகள், இராணுவ பலம் ஆகியவற்றால் அச்சுறுத்தப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டுள்ளன என்றும், ஒரு நாட்டின் உண்மை சக்தியை பறைசாற்ற ஆயுதங்களின் அணிவகுப்பு நடைபெறுகின்றன என்றும், திருத்தந்தை தன் உரையில் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

அணு ஆயுதங்கள், நன்னெறிக்கு புறம்பானவை மட்டுமல்ல, அவற்றைக் கொண்டு தாக்குதல்கள் மேற்கொள்வது, சட்டத்திற்குப் புறம்பானது என்று, அண்மையில், ஐ.நா. அவை கூட்டமொன்றில், பெரும்பான்மை நாடுகள் வாக்களித்திருப்பது, நம்பிக்கை தரும் ஒரு நிகழ்வு என்று, திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

10/11/2017 15:21