2017-11-10 15:50:00

2018 முதல், வத்திக்கானில் சிகரெட் விற்பனை நிறுத்தப்படும்


நவ.10,2017. 2018ம் ஆண்டு முதல், வத்திக்கான் பணியாளர்களுக்கு சிகரெட் விற்பனை நிறுத்தப்படும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கட்டளையிட்டுள்ளதாக, திருப்பீட செய்தித் தொடர்பாளர் Greg Burke அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

மக்களின் நலனைக் கெடுக்கும் ஒரு செயல்பாட்டை நிறுத்தவேண்டும் என்ற காரணத்திற்காக திருத்தந்தை இந்தக் கட்டளையை விடுத்துள்ளார் என்று கூறிய Burke அவர்கள், புகை பிடிப்பதால், ஒவ்வோர் ஆண்டும் 70 இலட்சம் மரணங்கள் நிகழ்கின்றன என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தையின் இந்த முடிவால், வத்திக்கானின் வருவாய் பாதிக்கப்பட்டாலும், மக்களின் வாழ்வை அச்சுறுத்தும் புகையிலை பயன்பாட்டை நிறுத்துவதே சரியான முடிவு என்று Burke அவர்கள் கூறினார்.

மேலும், "முழுமனித முன்னேற்றத்திற்கும், மனித குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் பணியாற்றும் அறிவியலே முழு மதிப்பை வெளிப்படுத்துகிறது" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக இவ்வெள்ளியன்று வெளியாயின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.