2017-11-10 15:53:00

இந்தியாவில் சிறுபான்மையினராக இருப்பது சாதகமான நிலை


நவ.10,2017. இந்தியாவில் சிறுபான்மையினராக இருப்பது பாதகமான நிலை அல்ல; இயேசு வாழ்ந்த காலத்தில் ஒரு சிறு குழுவையே உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்கப் பணித்தார் என்று, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Baselios Cleemis அவர்கள் கூறியுள்ளார்.

2018ம் ஆண்டு, சனவரி 1 முதல் 9 முடிய, பெங்களூருவில் நடைபெறவிருக்கும் இந்திய ஆயர் பேரவையின் நிறையமர்வு கூட்டத்தைப் பற்றி அறிவித்த வேளையில், கர்தினால் கிளீமிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

"பன்மையில் ஒருமைப்பட்டு, இரக்கப்பணியில் சாட்சிகளாக" என்பது, இந்திய ஆயர் பேரவை கூட்டத்தின் மையக்கருத்தாக அமையும் என்று, இப்பேரவையின் செயலர், ஆயர் தியடோர் மாஸ்கரீனஸ் அவர்கள் தெரிவித்தார்.

பல்வேறு மதங்களின் சங்கமமாகத் திகழும் இந்தியாவில், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக இருப்பதை சாதகமான நிலையாகக் கருதவேண்டும் என்றும், தங்கள் எடுத்துக்காட்டான வாழ்வால், அருளாளர் இராணி மேரியைப் போல், இந்திய சமுதாயத்தில் மாற்றங்களைக் கொணர முடியும் என்றும், ஆயர் மாஸ்கரீனஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.