2017-11-10 15:31:00

சுமைத் தூக்கும் தொழிலாளியின் நேர்மையான செயல்பாடு


நவ.10,2017. சென்னையின் புறநகர், தாம்பரம் இரயில் நிலையத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.5.75 லட்சத்தை பத்திரமாக திரும்ப ஒப்படைத்த சுமைத் தூக்கும் தொழிலாளியை இரயில்வே கோட்ட மேலாளர் நவீன் குலாதி அவர்கள் நேரில் சந்தித்து பாராட்டினார்.

சேலத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் விரைவு இரயில் கடந்த 1-ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது, நடைமேடையில், யாருமற்ற நிலையில், பை ஒன்று கிடந்ததை, அவ்வழியாக வந்த இரயில்வே சுமைத் தூக்கும் தொழிலாளியான பொய்யாமொழி அவர்கள் கண்டெடுத்தார். அந்த பையை திறந்து பார்த்தபோது அதற்குள் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன.

இதையடுத்து, அவர் தாம்பரம் இரயில் நிலைய அதிகாரி மற்றும் இரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த அதிகாரிகள், தாம்பரத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற இரயிலில் இருந்த பயணி இதை தவறவிட்டிருக்கலாம் என கருதி சென்னை எழும்பூர் இரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதேபோன்று, பணத்தை தவறவிட்ட பயணி, சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தை அடைந்ததும், அங்குள்ள அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அப்போது அவருடைய பை, தாம்பரம் இரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டதை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் பயணி தவறவிட்ட 5 லட்சத்து 75 ஆயிரத்து 720 ரூபாயை பத்திரமாக ஒப்படைத்தனர்.

மகிழ்ச்சியடைந்த பயணி, பொய்யாமொழி அவர்களுக்கு பணத்தை அன்பளிப்பாக வழங்கினார். அதை ஏற்க மறுத்த பொய்யாமொழி அவர்கள், இது தனது கடமை என பயணியிடம் கூறினார்.

இந்நிலையில், தாம்பரம் இரயில் நிலையத்துக்கு நேற்று வந்த சென்னை இரயில்வே கோட்ட மேலாளர் நவீன் குலாதி அவர்கள், பொய்யாமொழி அவர்களைச் சந்தித்து அவருடைய நேர்மையை பாராட்டினார். மேலும், அவருக்கு நினைவுப் பரிசாக இரயில்பெட்டி மாதிரி ஒன்றை வழங்கினார்.

இதற்கு முன்பு, வீட்டில் தகவல் தெரிவிக்காமல் ஓடிவந்த குழந்தைகளை அவர்கள் பெற்றோர்களிடம் பொய்யாமொழி அவர்கள் பத்திரமாக ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.