2017-11-10 15:13:00

திருத்தந்தை: ஊழல் வலைகளில் வீழாமல் செல்வதற்கு…


நவ.10,2017. இன்றைய உலகில் அன்றாடம் இடம்பெறும் ஊழல் வரலாறு, லூக்கா நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, தலைவரின் உடைமைகளைப் பாழாக்கும் வீட்டுப்பொறுப்பாளர் பற்றி இயேசு கூறியுள்ள உவமையை மையப்படுத்தி, மறையுரை வழங்கினார்.

மனித சமுதாயத்தில் நிகழும் ஊழல்களைப் பற்றி நாம் வரலாற்று நூல்களில் தேடத் தேவையில்லை, மாறாக, அவை, நம்மைச் சுற்றி, ஒவ்வொரு நாளும் நிகழ்வதை, செய்தித்தாள்களில் காண்கிறோம் என்று, திருத்தந்தை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

பொதுவான உடைமைகளுக்குப் பொறுப்பானவர்கள், அனைத்து உடைமைகளும் தங்களுக்குச் சொந்தமானதென்ற துணிவில், ஊழல் வழிகளைப் பின்பற்றுகின்றனர் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இத்தகையைச் சூழலில், ஊழல் வலைகளில் வீழாமல் செல்வதற்கு, கிறிஸ்தவர்கள் முன்மதி கொண்டவர்களாக இருக்கவேண்டும்; ஓநாய்கள் நடுவே செம்மறி ஆடுகள் போலவும், பாம்பின் முன்மதியும், புறாவின் கபடற்ற தன்மையும் கொண்டு வாழவேண்டும் என்று திருத்தந்தை தன் மறையுரையில் அறிவுறுத்தினார்.

காற்று மாசுப்பாட்டைப் போல, எங்கும் பரவியிருக்கும் ஊழலால், மக்கள் மூச்சடைத்துப் போகாமல், நலமுடன் வெளியேறவும், ஊழலைப் பரப்புவோர் தங்கள் சிறைகளிலிருந்து வெளியேறி வரவும் இறைவனிடம் வேண்டுவோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையின் இறுதியில் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.