2017-11-11 15:41:00

பொதுக்காலம் 32ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன" என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம். ஆனால், இன்றைய உலகில் நடக்கும் திருமணங்களின் ஒவ்வொரு அம்சமும், துல்லியமாக, தெளிவாக, சொர்க்கத்தில் அல்ல, இவ்வுலகிலேயே நிச்சயிக்கப்படுகின்றது என்பது நம் அனுபவம். எவ்வளவுதான் திட்டமிட்டு செய்தாலும், திருமணச் சடங்குகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக குழப்பங்கள் எழுவதுண்டு.

சில ஆண்டுகளுக்குமுன், சென்னையில், எனக்குத் தெரிந்த ஒருவரது திருமணத் திருப்பலிக்குச் சென்றிருந்தேன். என் கணிப்பில், கொஞ்சம் கூடுதலான ஆடம்பரங்களுடன் நடத்தப்பட்டத் திருமணம் அது. வீடியோ, மற்றும், புகைப்படக் காமெராக்கள் புடைசூழ நடந்த அந்தத் திருப்பலியில், மறையுரை முடிந்து, திருமண வார்த்தைப்பாடுகள் நிறைவேற்றப்பட்டன. அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த தாலிகட்டும் நேரம் வந்தது. வழக்கமாக மணமகன், கயிற்றால் அல்லது தங்கச்சங்கிலியால் செய்யப்பட்ட தாலியை மணமகள் கழுத்தைச்சுற்றி கட்டுவார். அன்று நான் பார்த்த அந்தத் தாலி வித்தியாசமாக இருந்தது. தங்கச் சங்கிலியால் ஆன அந்தத் தாலியைப் பிரித்து கோர்க்கும் வசதிகள் இல்லை. பெண்ணின் தலை வழியாக மாப்பிள்ளை அந்தத் தாலியைப் பெண்ணின் கழுத்தில் மாட்டிவிட வேண்டும். அங்குதான் ஆரம்பமானது பிரச்சனை.

தாலி செய்யப்பட்டிருந்த அளவு பிரச்சனையை ஆரம்பித்தது. சாதாரணமான ஒரு சூழலில், பெண்ணின் தலைவழியே மாட்டப்படும் அளவில் அந்தத் தாலி செய்யப்பட்டிருந்தது. ஆனால், திருமணத் திருப்பலிக்கு மணப்பெண் பலவித தலை அலங்காரங்களுடன் வந்திருந்ததால், தலை வழியே தாலியை மாட்ட முடியவில்லை. எனவே, மணப்பெண் கோவிலுக்கருகே இருந்த ஒரு தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர் தலையில் சூடப்பட்டிருந்த பல செயற்கை அலங்காரங்கள், மலர் அலங்காரங்கள் எல்லாமே அகற்றப்பட்டு, அவர் மீண்டும் பீடத்திற்கு அழைத்து வரப்பட்டார். எளியதொரு தோற்றத்தில் இப்போது பீடத்திற்கு வந்திருந்த மணப்பெண்ணின் தலை வழியாக தாலியை மாப்பிள்ளை எளிதாக மாட்டினார். இந்தப் பிரச்சனைத் தீர்வதற்கு பத்து நிமிடங்களுக்கு மேல் ஆயிற்று.

எவ்வளவுதான் திட்டங்கள் தீட்டப்பட்டு, முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு திருமணங்கள் நடைபெற்றாலும், எதிர்பாராத பிரச்சனைகள் ஒவ்வொரு திருமணத்திலும் தலைதூக்குவதைப் பார்க்கிறோம். திருமணத்தையொட்டி, பெண் வீட்டாருக்கென ஒதுக்கப்பட்ட சடங்குகள், மாப்பிள்ளை வீட்டாருக்கென ஒதுக்கப்பட்டச் சடங்குகள் என்று நடத்தப்படுவதால், ஒவ்வொரு சடங்கும் முடியும்வரை, அந்தந்த வீட்டார் முள்ளின்மீது நடப்பதுபோன்ற உணர்வைப் பெறுவதை நாம் பார்த்திருக்கிறோம். பல நாட்டுக் கலாச்சாரங்களில், திருமணத்தின் ஒரு முக்கியச் சடங்காகத் திகழ்வது, மாப்பிள்ளை அழைப்பு. அந்த மாப்பிள்ளை அழைப்பை மையப்படுத்தி, இயேசு கூறிய பத்துத் தோழியர் உவமை இன்றைய நற்செய்தியாக தரப்பட்டுள்ளது.

இந்த உவமையில், “மணமகளின் தோழியர் பத்துபேர்” என்று தன் கதையை ஆரம்பித்த இயேசு, உடனடியாக, அவர்களின் ஒரு முக்கிய பண்பையும் இணைத்துச் சொல்கிறார். உவமையில் சொல்லப்படும் பத்துத் தோழியரில் ஐந்து பேர் முன்மதி உடையவர்கள், மற்ற ஐந்து பேர் அறிவிலிகள். இவ்விரு குழுவினரும் நடந்துகொண்ட விதமே, உவமையின் கருவாக அமைந்துள்ளது. முதலில், அறிவிலிகள் நடந்துகொண்ட விதத்தை அலசுவோம்.

மணமகளின் தோழியாக இருப்பதற்கு அழைப்பு வந்ததும், ஐந்து அறிவிலிகள் என்ன செய்திருப்பார்கள் என்பதை நாம் இவ்வாறு கற்பனை செய்து பார்க்கலாம். அந்த ஐவரும் தலைகால் புரியாத மகிழ்ச்சியுடன், தாங்கள் என்னென்ன செய்யவேண்டும் என்று திட்டமிட்டு, பட்டியல் ஒன்றை தயாரித்திருப்பார்கள்.

தாங்கள் அணிந்து செல்லவேண்டிய உடை, நகைகள், அவற்றிற்குப் பொருத்தமாக வாங்க வேண்டிய காலணிகள் என்று, தங்கள் தோற்றத்தைப் பற்றி ஒரு பட்டியல் தயாரித்திருப்பார்கள். அதேபோல், தாங்கள் எடுத்துச்செல்லும் விளக்கு எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் அந்த விளக்கைச் சுற்றி எத்தனை மலர்கள் வைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் அவர்கள் எண்ணிப் பார்த்திருப்பார்கள். அவர்கள் எண்ணங்களில் ஓடிய அந்தப் பட்டியலில், ஒரு முக்கியமான அம்சம் மறக்கப்பட்டது. அதுதான்... விளக்கு எரிவதற்குத் தேவையான எண்ணெய்...

அறிவிலிகளின் எண்ணங்களில் எழுதப்பட்ட இப்பட்டியலுக்கு முற்றிலும் மாறாக,  முன்மதியுடைய ஐந்து பெண்களும் திட்டமிட்டு, பட்டியல் ஒன்றை தயாரித்திருப்பார்கள். அவர்கள் பட்டியலில் 'விளக்கு எரிவதற்குத் தேவையான எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும்' என்பது முதலாவதாகக் குறிக்கப்பட்டிருக்கும். அவசியங்களா? ஆடம்பரங்களா? எதற்கு முதலிடம் கொடுக்கிறோம் என்பதைச் சிந்திக்க இந்த உவமை உதவுகிறது.

இந்த உவமையை இன்னும் சிறிது ஆழமாக அலசுகையில், மற்றோர் அம்சமும் தெளிவாகிறது. மணமகன் வருவதற்கு காலம் தாழ்த்தப்பட்டது என்று உவமையில் சொல்லப்பட்டுள்ளது. அந்த நேரத்திலாவது இந்த ஐந்து பெண்களின் எண்ண ஓட்டம் அலங்காரங்களிலிருந்து விடுபட்டு, அவசியத் தேவையான எண்ணெய் பக்கம் திரும்பியிருந்தால், தவறை இவர்கள் சரி செய்திருக்கலாம். அலங்காரங்களும், அதனால் உருவான சோர்வும் இவர்களை ஆக்ரமித்ததால், அவசியமான எண்ணெயை இவர்களால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. இந்தக் கவனக்குறைவால், இவர்கள் பங்கேற்க வந்திருந்த திருமண விழாவையே இழக்க வேண்டியிருந்தது.

தகுந்த தயாரிப்புக்கள் இன்றி, அல்லது, தவறான தயாரிப்புக்களுடன் திருமண விழாவில் பங்கேற்க வந்திருந்த ஐந்து பெண்களைக் குறை சொல்வதற்கு நாம் தயாராக இருந்தால், சிறிது நேரம், நம்மைப்பற்றியும் சிந்திப்போம். ஒவ்வொரு முறையும், திருப்பலியில் கலந்துகொள்ள செல்லும் நாம், இறைவன் தரும் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, தகுந்த தயாரிப்புக்களுடன் பங்கேற்கிறோமா என்பதை ஆய்வு செய்வது நல்லது.

நாம் திருப்பலிக்குச் செல்லும்போது, குறிப்பாக, மிக முக்கியமான திருப்பலிகளுக்குச் செல்லும்போது, எவ்வித எண்ணங்களுடன், தயாரிப்புக்களுடன் செல்கிறோம்? திருமுழுக்கு, புதுநன்மை, திருமணம், அருள்பணியாளர் பட்டமளிப்பு, துறவியரின் வார்த்தைப்பாடு என்ற முக்கியமான திருப்பலிகளில், பீடத்தில் நிகழும் புனித நிகழ்வுகளைக் காட்டிலும், பீடத்தைச் சூழ்ந்திருக்கும் 'காமெராக்கள்' நம் கவனத்தை ஈர்க்கும்.

திருத்தந்தையோ, ஆயர்களோ முன்னின்று நடத்தும் திருப்பலியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தால், நம் மனதை ஆக்கிரமிக்கும் தயாரிப்புக்கள் எவை? திருப்பலி துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே சென்று, கோவிலில், அல்லது, திருப்பலி நடைபெறும் வளாகத்தில், நல்லதொரு இடத்தைப் பிடிக்கவேண்டும் என்பது நம் முதல் எண்ணம். நல்லதொரு இடம் என்றால்... திருத்தந்தையையோ, ஆயரையோ அருகில், மிக அருகில் காணக்கூடிய ஓரிடம். அவ்விடத்தில் இருந்தால், நல்ல புகைப்படங்கள், அல்லது, வீடியோ எடுக்கமுடியும் என்று கணக்கிடுகிறோம். முடிந்தால், திருத்தந்தையோ, ஆயரோ திருப்பலி நிறைவேற்றும் வேளையில், நாமும் உடன் நிற்பதுபோன்ற ஒரு கோணத்தில், 'செல்ஃபி' (Selfie) எடுப்பதைப் பற்றியும் சிந்திக்கிறோம். அதற்குத் தகுந்ததுபோல், 'செல்ஃபி' எடுக்கக்கூடிய கருவிகளையும் உடன் எடுத்துச் செல்கிறோம்.

திருமுழுக்கு, திருமணம் என்று, அருளடையாளங்களை மையப்படுத்திய திருப்பலிகளானாலும் சரி, திருத்தந்தை, ஆயர்கள் கலந்துகொள்ளும் முக்கியமான திருப்பலிகளானாலும் சரி, இத்திருப்பலிகள், நம் மனங்களில் பதிகின்றனவா என்பதைவிட, நம் 'காமிராக்களில்' பதிகின்றனவா என்பதில் நம் கவனம் அதிகம் செல்கிறது. இத்தகைய கவனம், திருப்பலியில் பங்கேற்கும் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, கூட்டுத் திருப்பலியை இணைந்து ஒப்புக்கொடுக்கும் ஆயர்கள், அருள்பணியாளர்களிடமும் உள்ளது என்பதை, திருத்தந்தை அண்மையில் வருத்தத்தோடு பகிர்ந்துகொண்டார். நவம்பர் 8, கடந்த புதனன்று, தன் மறைக்கல்வி உரையில், திருப்பலியைப் பற்றி பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உள்ளத்தில் ஆழப்பதிந்த ஒரு வருத்தத்தை மக்களிடம் இவ்வாறு வெளிப்படுத்தினார்:

"திருப்பலியை முன்னின்று நடத்தும் அருள்பணியாளர், 'இதயங்களை மேலே எழுப்புங்கள்' என்று சொல்கிறார். 'போட்டோ எடுப்பதற்காக செல்போன்களை மேலே உயர்த்துங்கள்' என்று அவர் சொல்வதில்லை. புனித பேதுரு வளாகத்திலோ, அல்லது, பசிலிக்காவிலோ நான் திருப்பலியைக் கொண்டாடும் வேளையில், பல செல்போன்கள் உயர்த்தப்பட்டிருப்பதைக் காணும்போது, எனக்கு வேதனையாக உள்ளது. விசுவாசிகள் மட்டுமல்ல, அருள்பணியாளர்களும், ஆயர்களும் இவ்வாறு செய்வது எனக்கு வேதனையைத் தருகிறது. உங்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்! திருப்பலி ஒரு கேளிக்கை காட்சி அல்ல! ஆண்டவரின் பாடுகளையும், உயிர்ப்பையும் சந்திக்கும் தருணம். அதனால்தான், அருள்பணியாளர், 'இதயங்களை மேலே எழுப்புங்கள்' என்று சொல்கிறார். நினைவில் கொள்ளுங்கள்! திருப்பலி நேரத்தில், செல்போன்கள் வேண்டாம்!"

அவசியமற்றவைகளில் அதிக கவனம் செலுத்திவிட்டு, அவசியமானவற்றை மறந்துவிட்டால் வாழ்வில் முக்கியமானவற்றை, அல்லது, வாழ்வையே இழக்க வேண்டியிருக்கும். இதற்கு, 1988ம் ஆண்டு வெளிவந்த ஒரு செய்தி, நல்லதோர் எடுத்துக்காட்டு. இது ஓர் எச்சரிக்கையும் கூட.

வீடியோப் படங்கள் எடுப்பதில் சிறந்த Ivan Lester McGuire என்ற 35 வயது கலைஞரின் மரணம் பற்றிய செய்தி 1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் தேதி வெளியானது. பறக்கும் விமானத்திலிருந்து ஒரு குழுவாகக் குதித்து, கரங்களைக் கோர்த்து, வானில் சாகசங்கள் புரிவோரைப் பற்றிய செய்தி இது. Sky Diving என்று அழைக்கப்படும் இந்த சாகசத்தில் ஈடுபடும் இவர்கள், பறக்கும் விமானத்திலிருந்து ஒவ்வோருவராகக் குதிப்பார்கள். வான்வெளியில், ஒரு சங்கிலித்தொடராக கரங்களைப் பற்றியபடி அந்தரத்தில் இக்குழுவினர் பல வடிவங்களை அமைத்துக் காட்டுவார்கள். பின்னர், பூமியை நெருங்கும் வேளையில், தங்கள் இடையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு விசையைத் தட்டுவார்கள். உடனே, அவர்களுடன் இணைக்கப்பட்ட ஒரு 'பாரச்சூட்' விரியும். அவர்கள் அனைவரும் பத்திரமாகத் தரையிறங்குவர். இந்த சாகசங்களைப் பதிவு செய்வதற்கு வீடியோ படக்கலைஞர் ஒருவரும், இக்குழுவுடன், விமானத்திலிருந்து குதிப்பார். 1988ம் ஆண்டு நடந்த இச்சாகசத்தின்போது, 10,500 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து ஒவ்வொருவராகக் குதிப்பது காண்பிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கைகோர்த்து ஒரு வட்டம் அமைப்பது வரை ஒழுங்காகக் காட்டப்பட்ட அந்த வீடியோ, திடீரென புரண்டு, தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் திரையில் ஒன்றும் இல்லை.

நடந்தது இதுதான். வீரர்கள் குதிப்பதை விமானத்திலிருந்தபடியே படம் பிடித்த வீடியோ கலைஞர் McGuire அவர்கள், இறுதியாக தானும் விமானத்திலிருந்து குதித்தார். வீடியோ எடுப்பதிலேயே கவனமாய் இருந்த அவர், தான் 'பாரச்சூட்' அணியவில்லை என்பதை உணராமல் குதித்துவிட்டார். வானில் நடைபெறும் இந்த சாகசகங்களை 800 முறைகளுக்கும் மேல் வீடியோ படம் எடுத்து புகழ்பெற்றவர் Ivan Lester McGuire. அன்று 'பாரச்சூட்' இல்லாமல் குதித்ததால், தன் வாழ்வை இழந்தார்.

தேவையானவை, தேவையற்றவை, அவசியமானவை, அவசியமற்றவை, அலங்காரங்கள், ஆடம்பரங்கள் என்று நம் வாழ்வை நிறைத்துவிடும் பல அம்சங்களில் தேவைகளை, அவசியமானவற்றைப் பிரித்துப்பார்க்கும் பக்குவம், கண்ணோட்டம் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று ஒருவர் ஒருவருக்காக வேண்டிக் கொள்வோம்.

“தற்போது நான் அதிகம் 'பிசி'யாக இருக்கிறேன். பல முக்கியமான அலுவல்கள் உள்ளன. இந்தப் பாகுபாடுகளைச் சிந்திக்க எனக்கு நேரமும் இல்லை, மன நிலையும் இல்லை. வாழ்வின் இறுதி காலத்தில், மரணம் நெருங்கும் வேளையில் இந்த வேறுபாடுகளையெல்லாம் சிந்தித்துக் கொள்ளலாம்” என்று நமக்கு நாமே சொல்லிக் கொண்டால், இயேசு இன்றைய நற்செய்தியில் கூறும் இறுதி வரிகள் நம்மைக் காப்பாற்ற வேண்டும்: “விழிப்பாயிருங்கள்; ஏனெனில் இறைவன் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.” (மத்தேயு நற்செய்தி 25: 13)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.