2017-11-13 16:00:00

சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருப்பது, இடறலான வாழ்வு


நவ.13,2017. இடறலான வாழ்வு என்பது, இதயங்களைக் காயப்படுத்தி, மனிதர்களின் நம்பிக்கையைக் கொல்கின்றது என, இத்திங்கள் காலை திருப்பலி மறையுரையில் எடுத்தியம்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாவ சோதனைகள் வருவது தவிர்க்க முடியாதது, ஆனால், அதற்கு காரணமாக இருப்பவர்களுக்கு ஐயோ கேடு என இயேசு எடுத்துரைக்கும் இத்திங்களின் நற்செய்தி வாசகம் குறித்து, கருத்துக்களை பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றவர்களுக்கு இடறலாக இருப்பது என்பது, அவர்களின் நம்பிக்கைகளையும், எதிர்காலத்தையும் கொல்வதற்கு ஈடாகும் எனவும் கூறினார்.

கிறிஸ்தவன் என்ற பெயரை தாங்கிக்கொண்டு, புறவினத்தாரின் வாழ்வை வாழ்வது, இறைமக்களுக்கு ஓர் இடறலான வாழ்வாகும் எனவும் கூறினார் திருத்தந்தை.

சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக இருக்கும்போது, இறைவனின் மந்தையைக் குறித்த அக்கறையற்ற நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம் என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளுக்கும் பணத்துக்கும் நாம் ஒரே நேரத்தில் பனிபுரிய முடியாது என்பதை, இறைமந்தைக்குப் பொறுப்பாக இருக்கும் மேய்ப்பர்கள் உணர்ந்து செயல்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், இத்திங்களன்று காலை, திருப்பீடத் துறைகளின் தலைவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.