சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ நீதிப் பணி

தொழில்நுட்பமா, நன்னெறி மதிப்பீடுகளா, முதலிடம் எதற்கு?

தென் கொரியாவில், போர்க்களங்களில் பயன்படும் வகையில் உருவாக்கப்படும் ரோபோ - AFP

14/11/2017 16:51

நவ.,14,2017. மனிதனின் அரிய கண்டுபிடிப்புகள், ஆயுதங்களிலும், மோதல்களிலும் செலவிடப்படாமல், மனித வாழ்வின் தரத்தை அதிகரிக்கவும், மாண்பை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் இவான் யுர்கோவிச்.

ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகச் செயலாற்றும் பேராயர் யுர்கோவிச் அவர்கள், உயிர் கொல்லும் அபாயம் நிறைந்த தானியங்கி ஆயுத அமைப்புமுறை குறித்த ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றியபோது, ஆயுத உற்பத்தி குறித்த முடிவுகள், இன்றைய உலகில், மதிப்பீடுகள், மனச்சான்று மற்றும் அனைத்துலக மனிதாபிமான சட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத வகையில் எடுக்கப் படுகின்றன என்ற கவலையையும் தெரிவித்தார்.

எந்த ஓர் ஆயுத தலையீடும் மனித குலத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதாக, அது முறையானதா என்ற கேள்விகளுக்குப்பின் இடம்பெறவேண்டியதாக இருப்பதால், தானியங்கி ஆயுத அமைப்புக்கள்,  பல்வேறு கேள்விகளை மனிதன் முன் வைக்கின்றன எனவும் உரைத்தார் பேராயர் யுர்கோவிச்.

தவறுகள் நடக்கும்போது, தானியங்கி ஆயுத அமைப்புக்கள்மீது பழியைப் போட்டு மனிதர்கள் தங்கள் பொறுப்பை கைகழுவும் வாய்ப்புக்கள் அதிகம் எனக் கூறிய பேராயர், நன்னெறியின் துணைகொண்டு, இயந்திரங்களால் முடிவெடுக்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இராணுவ ரோபோக்கள் தயாரிப்பில் ஈடுபடும் இன்றைய உலகம், தொழில்நுட்ப வளர்ச்சியைவிட, நன்னெறி மதிப்பீடுகளுக்கு முதலிடம் கொடுக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார், பேராயர் யுர்கோவிச்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

14/11/2017 16:51