சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ உரையாடல்

வன்முறை நிறைந்த உலகில், வன்முறையற்ற வழிகளில் நடைபோட..

தாய்வான் புத்த துறவிகள் - EPA

14/11/2017 16:52

நவ.,14,2017. வன்முறைகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய உலகில், புத்த மதத்தினரும் கிறிஸ்தவர்களும் இணைந்து, வன்முறையற்ற வழியில் நடைபோடுவது குறித்த 4 நாள் கலந்துரையாடல், தாய்வான் நாட்டில் இத்திங்களன்று துவங்கியது.

பல்சமய உரையாடல் திருப்பீட அவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கலந்துரையாடலின் இறுதி நாள் நிகழ்ச்சியின்போது, அதாவது, இம்மாதம் 16ம் தேதி வியாழனன்று, இவ்வவையின் தலைவர், கர்தினால் Jean-Louis Tauran அவர்களின் உரை இடம்பெறும்.

18 நாடுகளின் பிரதிநிதிகள் தாய்பேயின் Ling Jou துறவு இல்லத்தில் கலந்துகொள்ளும் இந்த ஆறாவது கலந்துரையாடலை, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் செயலர், ஆயர் Miguel Ángel Ayuso Guixot அவர்கள் துவக்கி வைத்தார்.

கிறிஸ்தவர்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே முதல் கலந்துரையாடல், 1995ம் ஆண்டு தாய்வானிலும், அதன்பின் 1998ம் ஆண்டு, இந்தியாவின் பங்களூருவிலும், 2002ம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவிலும், 2013ம் ஆண்டு உரோம் நகரிலும், 2015ம் ஆண்டு இந்தியாவின் போத் கயாவிலும் இடம்பெற்றன.

உலகில் ஒவ்வோர் ஆண்டும் 13 இலட்சம் பேர் வன்முறைகளுக்குப் பலியாவதையும், 120 கோடி பேர், அதாவது உலக மக்கள் தொகையில் 5க்கு ஒருவர், வன்முறை மற்றும் பாதுகாப்பற்ற நிலைகளால் பாதிக்கப்பட்டுவருவதையும் கருத்தில் கொண்டு, இக்கருத்தரங்கு ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

14/11/2017 16:52