2017-11-15 14:19:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 1


நவ.15,2017. பொதுச்சங்கம் என்று சொன்னவுடன், இருபதாம் மற்றும், இருபத்தோராம் நூற்றாண்டுகளில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு, முதலில் நினைவுக்கு வருவது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம். 1962ம் ஆண்டு அக்டோபர் 11ம் நாளிலிருந்து, 1965ம் ஆண்டு டிசம்பர் 8ம் நாள் வரை, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெற்ற மாபெரும் பேரவைக் கூட்டத்தில் உலகமனைத்திலுமிருந்து, 2,900த்துக்கும் அதிகமான ஆயர்கள் பங்கேற்றனர். இம்மாபெரும் நிகழ்வு, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் என்று அழைக்கப்படுகின்றது. இப்பொதுச் சங்கத்தில்தான் வரலாற்றிலேயே முதன்முதலாக, உலகமனைத்திலுமுள்ள மக்களின் குரல் ஒலித்தது. திருஅவையின் எல்லா மரபுச் செல்வங்களின் தாக்கமும் உணரப்பட்டது. ஆனால் திருஅவையின் வரலாற்றில், தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை, 21 அல்லது 22  பொதுச்சங்கங்கள் நிகழ்ந்துள்ளதாகப் பொதுவாகக் கணிக்கப்படுகிறது. ஆனால் எல்லாப் பொதுச்சங்கங்களிலும், அவ்வப்போது வாழ்ந்த எல்லா ஆயர்களும் பங்குகொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக, ஐந்தாம் பொதுச்சங்கமாகிய 2ம் கான்ஸ்ந்தாந்திநோபிள் சங்கத்தில், கீழை திருஅவை ஆயர்கள் மட்டுமே பங்கேற்றனர். அதேபோல் பிற்காலத்தில், உலகின் மேற்குப் பகுதியில் நிகழ்ந்த பொதுச் சங்கங்களில், மேலைத் திருஅவை ஆயர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.   

‘சங்கம்’ என்பதற்கு, திருஅவை வழக்கில், இலத்தீன் மூலத்திலிருந்து பிறந்த Council  என்ற சொல்லும், கிரேக்க மூலத்திலிருந்து பிறந்த Synod என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. Council என்ற சொல், ஒன்றுகூட்டப்படல் என்ற பொருளையும், Synod என்ற சொல், இணைந்து வழிநடத்தல் என்ற பொருளையும் உணர்த்துகின்றன. ‘சங்கம்’ என்பது, திருஅவையின் ஆயர்கள், திருஅவை வாழ்வு பற்றி விவாதித்து முடிவுகள் எடுக்க ஒன்றுகூடுகின்ற கூட்டத்தைக் குறித்து வந்துள்ளதாக, வரலாற்றில் நடைபெற்ற சங்கங்களைப் பாரக்கும்போது தெரிகிறது. ‘பொது’ எனும் அடைமொழி, Ecumenical என்ற கிரேக்க வழிச் சொல்லின் மொழிபெயர்ப்பாகும். எக்குமினி (Oikumene) எனும் கிரேக்கச் சொல், ‘மனிதர்கள் குடியேறியுள்ள உலகம்’ என்னும் பொருளையும், ‘உலகளாவிய’ என்னும் பொருளையும் தருகின்றது. இவ்வாறு பார்க்கும்போது, பொதுச்சங்கம் என்பது, உலகிலுள்ள ஆயர்கள் ஒன்றுகூடி, திருஅவையின் நலனுக்கென முடிவுகள் எடுத்துச் செயல்பட முனைவதைக் குறிக்கும். இவ்வாறு, ‘சங்கம்’ என்ற சொல்லாடலுக்கு, இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள் நூல், விளக்கம் அளிக்கிறது.

திருஅவையின் ஆரம்ப காலத்திலிருந்து நிகழ்ந்துள்ள பொதுச்சங்கங்கள் ஒவ்வொன்றிலும், அந்தந்தக் காலத்தில் திருஅவையின் கோட்பாடுகளுக்கு முரணாக எழுந்த முக்கிய பொருள் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். கி.பி.325ம் ஆண்டு மே 20ம் நாளிலிருந்து ஜூன் 19ம் நாள் வரை நிகழ்ந்த, முதலாம் நீசேயா பொதுச் சங்கத்தில், கிறிஸ்துவின் இறையியல்பு விவாதிக்கப்பட்டது. ஏனென்றால் அக்காலக்கட்டத்தில், ஆரியுஸ் என்பவர், இயேசு கிறிஸ்து இறையியல்பைக் கொண்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் படைக்கப்பட்டவரே என்று போதித்தார். இதனால் திருஅவையில் குழப்பம் ஏற்பட்டது. கிறிஸ்தவத்தில் அமைதியையும், ஒன்றிப்பையும் கொணரும் நோக்கத்தில், உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்ட்டைன் அவர்கள், இப்பொதுச் சங்கத்தைக் கூட்டினார். இச்சங்கத்தில் ஆரியுஸ் என்பவரின் கொள்கை தவறு என்று அறிவிக்கப்பட்டது. அதோடு, கிறிஸ்துவின் உ.யிர்ப்புப் பெருவிழா தேதி, மூன்றாம் பாலினத்தவருக்குத் திருப்பொழிவு, தப்பறைக் கொள்கைகளைப் போதிப்பவரின் திருமுழுக்கின் தகுதி உட்பட சில பொருள்கள் முதலாம் நீசேயா பொதுச் சங்கத்தில் விவாதிக்கப்பட்டன. ஞாயிறு மற்றும் முக்கிய விழாக்கள் திருப்பலிகளில், கத்தோலிக்கர் அறிக்கையிடும் நீசேயா நம்பிக்கை அறிக்கை வகுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட 318 ஆயர்களும், இந்த அறிக்கையை ஒரே மனதாக ஏற்றனர்.  

கி.பி.381ம் ஆண்டில் நிகழ்ந்த முதலாம் காள்ஸ்தாந்திநோபிள் பொதுச் சங்கத்தில், தூய ஆவியாரின் இறையியல்பு பற்றியும், கி.பி.431ம் ஆண்டில் நிகழ்ந்த எபேசு பொதுச் சங்கத்தில், மரியா கடவுளின் தாய் என்பது பற்றியும், கி.பி.451ம் ஆண்டில் நிகழ்ந்த கால்செதோன் பொதுச் சங்கத்தில், கிறிஸ்துவின் மனித இறை இயல்புகள் பற்றியும், கி.பி.797ம் ஆண்டில் நிகழ்ந்த 2வது நீசேயா பொதுச் சங்கத்தில், திருவுருவ வணக்கம்  பற்றியும் விவாதிக்கப்பட்டன. மொதத்தில், கி.பி.325ம் ஆண்டு முதல், 870ம் ஆண்டு வரை திருஅவையில் நிகழ்ந்த முதல் எட்டுப் பொதுச் சங்கங்களும், கிழக்கு உரோமைப் பேரரசின் தலைநகராக விளங்கிய கான்ஸ்தாந்திநோபிள் நகரிலும், அதையடுத்த நகரங்களிலும் நிகழ்ந்தன. இப்பொதுச்சங்கங்கள், உரோமைப் பேரரசர்களால் கூட்டப்பட்டன. கிறிஸ்தவ நம்பிக்கை உண்மைகளை வரையறுப்பதே இவற்றின் முக்கிய நோக்கமாக இருந்தது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.