2017-11-15 14:29:00

திருத்தந்தைக்குப் பரிசாக வழங்கப்பட்ட Lamborghini கார்


நவ.15,2017. "வாழ்வின் பெரும் துணையாளராக இருப்பது, நம்பிக்கை. தன் படைப்புக்களை ஒருபோதும் தனிமையில் தவிக்கவிடாத தந்தையை உணர்வதற்கு நம்பிக்கை உதவுகிறது" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இப்புதனன்று வெளியாயின.

மேலும், இத்தாலி நாட்டில், கார்கள் உற்பத்தியில் புகழ்பெற்ற Lamborghini என்ற நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், அந்நிறுவனத்தின் Huracán என்ற பெயர் கொண்ட வாகனத்தை, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் பரிசாக அளித்தனர்.

திருத்தந்தை தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிறக் கார், திருத்தந்தையிடம் வழங்கப்பட்டது.

இந்தக் கார் ஏலத்தில் விடப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் தொகை, திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக் நாட்டின் நினிவே சமவெளியில் கிறிஸ்தவர்களை மீண்டும் குடியமர்த்தும் பணிகளுக்கும், பாலியல் கொடுமைகளின் துயரங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டங்களுக்கும் இந்தத் தொகை பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.