2017-11-15 15:04:00

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : திருப்பலி ஓர் உன்னத செபம்


நவ.15,2017. திருப்பலி குறித்த புதிய மறைக் கல்வித் தொடரை கடந்த வாரம் புதனன்று துவக்கி, முன்னுரையும் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், திருப்பலி ஓர் உன்னத செபம் என்ற கருத்தை மையமாக வைத்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார். தனியாக ஓரிடத்திற்குச் சென்று செபித்துகொண்டு வந்த இயேசுவிடம், அவருடைய சீடர்களுள் ஒருவர், தங்களுக்கும் செபிக்கக் கற்றுத்தருமாறு வேண்டியதையும், அதைத் தொடர்ந்து, இயேசு, இறைவனிடம் வேண்டும் முறை குறித்து சொல்லித்தந்ததையும் விவரிக்கும் லூக்கா நற்செய்தி 11ம் பிரிவின் முதல் பகுதி திருவசனங்கள் வாசிக்கப்பட, அதையொட்டி தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்பு சகோதர சகோதரிகளே, திருப்பலி குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று, திருப்பலி என்பது எல்லாவற்றிற்கும் மேலாக ஓர் செபம், அதாவது, உன்னத ஒரு செபம் என்பது குறித்து சிந்திப்போம். ஒவ்வொரு திருப்பலியிலும், இயேசுவின் வார்த்தையிலும், அவரின் உடலிலும் இரத்தத்திலும் அவரை நாம் சந்திக்கிறோம். இறைச்சாயலில் படைக்கப்பட்ட நாம் அவரை அறிந்து கொள்ளவும், அவரை அன்புகூர்ந்து, அவருக்குப் பணிவிடை புரியவும் உருவாக்கப்பட்டுள்ளோம். செபத்தில் நாம், இயேசுவின் அருகாமையையும் அன்பையும் அனுபவிக்கிறோம். செபத்தில் நாம் அவரோடு பேசுவது மட்டுமல்ல, நம் இதயத்தில் நம்மோடு அவர் பேசும் குரலையும் கண்டுகொள்ள கற்றுக் கொள்கிறோம். தன் சீடர்களுக்கு கற்றுத் தந்ததைபோல், இயேசுவே நமக்கும் செபிக்கக் கற்றுத் தருகிறார். இறைவனை, தந்தை என அழைப்பதையும், அவர் அன்பில் முழு நம்பிக்கை கொள்வதையும், இறையன்பின் அடையாளங்களால் தொடர்ந்து திடீர் வியப்புக்களைப் பெறுவதையும் நாம் இயேசுவிடமிருந்து கற்றுக் கொள்கிறோம். நாம் மறுபடியும் பிறக்க வேண்டியதன் அவசியம் குறித்து இயேசு பேசும்போது, தூய ஆவியாரில் புது வாழ்வை நாம் ஏற்றுக்கொள்ளும்படி நமக்கு அழைப்பு விடுக்கிறார். தன் சிலுவைப்பலி வழியாக, இயேசு, நம் பாவங்களுக்கு பரிகாரம் தேடி, நாம் ஒரு புதிய துவக்கத்தைக் கண்டு, உண்மையான ஆன்மீக வாழ்வை நடத்திச் செல்ல, நமக்கு பலத்தை வழங்கியுள்ளார். செபத்தில், எல்லாவற்றிற்கும் மேலாக, திருப்பலியில் நாம் இயேசுவை சந்திக்கும்போது, அவர் இருப்பின் ஆறுதலையும், மன்னிப்பின் அருளையும், கடவுளின் அன்புக்குரிய குழந்தைகளாக வாழ நாம் பெற்றுள்ள அழைப்பின் மகிழ்வையும், அனுபவிக்கிறோம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.