2017-11-15 14:53:00

பாசமுள்ள பார்வையில்..........., : தாய் மண்ணுடன் உள்ள உறவு


மதுசூதனனுக்கு தன் தாய்மண் மீது இருந்த ஆர்வம், கடைசியில் அவனை இராணுவத்தில் சேரவைத்தது. கார்கில் போர் வரும்வரை அவனும் ஒழுங்காக வீட்டோடு தொடர்பு வைத்துக் கொண்டுதானிருந்தான். தன் தந்தையுடன் 15 நாட்களுக்கு ஒருமுறையாவது பேசிவிடுவான். ஆனால், கடந்த ஒரு மாதமாக அவனிடமிருந்து எந்த அழைப்பும் இல்லை. பணியில் தீவிரமாக இருக்கிறான் என்று தந்தை, தன்னைத்தானே தேற்றிக் கொண்டாலும், அவர் மனதிற்குள் ஓர் ஓரத்தில் ஏதோ அச்சம் தலைதூக்கித்தான் இருந்தது. இராணுவத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்று, தற்போது தன் ஊரில் வாழ்கின்ற கந்தசாமியைப் பார்த்து விவரம் கேட்கச் சென்றார் அந்த முதியவர். 'ஐயா. மன்னிக்கவேண்டும். உங்களுக்கு விவரம் தெரியாதா? இங்கு இரணுவத்தினர் வந்து விவரம் சொன்னதும், மதுசூதனின் பொருட்களை உங்கள் மகளிடம் ஒப்படைத்ததும் உங்களுக்குத் தெரியாதா? இதய நோயாளியான தங்களிடம், உங்கள் மகள் அனைத்தையும் மெதுவாக நேரம் பார்த்து சொல்கிறேன் என்று சொல்லியிருந்தாரே?' என கந்தசாமி கூறியதும், தலை சுற்றுவதுபோல் இருந்தது அவருக்கு. தான் கடந்த வாரம் ஐந்து நாட்களுக்கு இராமேஸ்வரம் சென்று வருவதற்குள் இதெல்லாம் நடந்திருக்கிறது, என எண்ணிக்கொண்ட அவர்,  ‘என் மகன் எப்படி இறந்தான்’, என கேட்க, 'போர்க்களத்தில் படுகாயமுற்ற மதுசூதனனை மருத்துமனையில் அனுமதித்திருக்கிறார்கள். நல்ல சிகிச்சைகள் வழங்கப்பட்டும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. அவன் இறக்கும் தறுவாயில் செய்த ஒரு காரியம்தான் இன்று இராணுவத்தின் மத்தியில் நம் ஊரையே வணங்க வைத்திருக்கிறது. ஆம். அவன் இறக்கும்போது, தன்னை மண் தரையில் படுக்க வைக்கச் சொல்லியிருக்கிறான். ஏன் என்று கேட்டதற்கு, தன் தாயின் மடியில் உயிர்விட ஆசைப்படுகிறேன் என கூறியிருக்கிறான். கடைசி மூச்சுவரை இந்த மண்ணையே தன் தாயாக நேசித்த ஒரு மகனைப் பெற்றதற்கு நீர் மட்டுமல்ல. இந்த ஊரே பெருமைப்படவேண்டும்' என்றார் கந்தசாமி. தன் மகனுக்கு, தாய் நாடு பாசத்தை ஊட்டி, இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன தன் மனைவியை நினைத்துக்கொண்ட மதுசூதனின் தந்தை, தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தார்.

ஒரு தாய்க்கும் மகனுக்கும் இருக்கும் உறவுதான், அவனுக்கும் அவன் பிறந்த மண்ணுக்கும் இருக்கும் உறவு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.