2017-11-16 15:15:00

உடன்பிறந்த உணர்வு, உண்மையிலேயே மகிழ்வளிக்கிறது-திருத்தந்தை


நவ.16,2017. நல்லாயனாம் கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, நற்செய்தி அறிவிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அருள்பணியாளரிடையே நிலவும் உடன்பிறந்த உணர்வு, உண்மையிலேயே நம்மை மகிழ்வளிக்கிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

அருள்பணியாளரின் திருத்தூது ஒருமைப்பாட்டு அமைப்பின் பன்னாட்டு கூட்டத்தில் கலந்துகொள்ள வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள பிரதிநிதிகளை, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, "சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது!" என்ற திருப்பாடல் வரிகளுடன் தன் உரையைத் துவக்கினார்.

இக்கூட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள, "மறைமாவட்டக் குழுமத்தில், குழுமத்துடன், குழுமத்திற்காக" என்ற மையக்கருத்து, மறைமாவட்ட அருள்பணியாளரின் முக்கியமான ஆன்மீகத்தை வெளிப்படுத்துகிறது என்று திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

அருள்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள், அவர்களது தனிப்பட்ட திறமைகளையும், சக்தியையும் மட்டும் சார்ந்தவை அல்ல, மாறாக, இறைவனின் செயல்பாடு என்பதை அனைவரும் உணரவேண்டும் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

மறைமாவட்டத்தில், அமைப்புக்களையும், இயக்கங்களையும் உருவாக்குவதற்கு முன்னர், அக்குழுமத்தில் வாழும் மக்களின் ஒட்டுமொத்த நாடித்துடிப்பை உணர்ந்து, அதற்குத் தகுந்த திட்டங்களை வகுப்பது, அருள்பணியாளர்களின் முக்கிய கடமை என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.