2017-11-16 14:09:00

உலக மருத்துவக் கழகத்திற்கு திருத்தந்தையின் செய்தி


நவ.16,2017. மனித வாழ்வின் முடிவைக் குறித்த கேள்விகள், சமுதாயத்திற்கு சவால்களை அளித்து வந்துள்ளன என்பதை மனித வரலாறு சொல்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் நடைபெறும் ஒரு கருத்தரங்கிற்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.

உலக மருத்துவக் கழகத்தின் ஐரோப்பிய கூட்டம், நவம்பர் 16, மற்றும் 17 ஆகிய இரு நாட்கள் வத்திக்கானில் நடைபெறுவதையொட்டி, திருத்தந்தை வழங்கியுள்ள இச்செய்தி, பாப்பிறை வாழ்வுக் கழகத்தின் தலைவர், பேராயர், வின்சென்ஸோ பாலியா அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மருத்துவ உலகில், அறுவைச் சிகிச்சைகளும், ஏனைய வழிமுறைகளும் வெகுவாக முன்னேறியுள்ளன எனினும், அவை, மனிதரின் முழுமையான நலனுக்கு எப்போதும் உதவுவன அல்ல என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை இச்செய்தியில் கூறியுள்ளார்.

வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ள மனிதர்களின் மாண்பு முற்றிலும் காக்கப்படவேண்டும் என்று தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, மனித வாழ்வை நீட்டிப்பது அல்லது நிறுத்துவது போன்ற முடிவுகள், நன்னெறி மற்றும் நற்செய்தியின் விழுமியங்களுக்கு உகந்த முடிவுகளாக இருக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து மனிதருக்கு, குறிப்பாக, சமுதாயத்தில் வலுவிழந்தோருக்கு உதவும் வகையில், முடிவுகளை எடுக்க, இந்த கருத்தரங்கில் கலந்துகொள்வோருக்கு இறைவன் ஒளி வழங்கவேண்டும் என்ற ஆசீரோடு திருத்தந்தை தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.