2017-11-16 15:06:00

உலக மாமன்றம் திருத்தந்தையின் பரிசு - சலேசிய உலகத் தலைவர்


நவ.16,2017. உலகின் விளிம்புகளுக்குச் சென்று, மறைப்பணியாற்ற வேண்டும் என்பதில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், புனித தொன் போஸ்கோவும் ஒருமித்த கருத்துடையவர்கள் என்று, சலேசிய துறவு சபையின் உலகத் தலைவர், அருள்பணி Ángel Fernández Artime அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறினார்.

இந்தியாவின் மும்பை நகரின் மாதுங்காவில் அமைந்துள்ள  புனித தொன் போஸ்கோ திருத்தலத்தின் 60ம் ஆண்டு நிறைவுக்கென இந்தியாவிற்கு சென்றுள்ள அருள்பணி Artime அவர்கள், இளையோரை மையப்படுத்தி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக ஆயர்கள் மாமன்றம் குறித்தும், அண்மையில் விடுதலையான சலேசிய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் அவர்களைக் குறித்தும் தன் கருத்துக்களை வெளியிட்டார்.

அருள்பணி டாம் அவர்கள் அடைந்த துன்பங்கள், இந்தியாவில் உள்ள சலேசியர்களுக்கு மட்டுமல்ல, மாறாக, உலகெங்கும் கடினமானச் சூழல்களில் மறை பணியாற்றிவரும் அனைத்து சலேசிய துறவியருக்கும் ஓர் உந்து சக்தியாக உள்ளது என்று அருள்பணி Artime அவர்கள் குறிப்பிட்டார்.

உலகின் 132 நாடுகளில் பணியாற்றி வரும் சலேசிய துறவிகள், இளையோரைக் குறித்து கருத்துக்களைத் திரட்டி வருவதாகவும், இளையோரை மையப்படுத்தி நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றம், இவ்வுலகிற்கும், தங்கள் சபைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் ஒரு பரிசு என்றும் அருள்பணி Artime அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.